செவ்வாய், 21 மார்ச், 2017

திருவாசகத் தேன் - தொடர் - 1

திருச்சிற்றம்பலம்


“பாழான என்மனம் குவிய ஒருதந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ”                                                                                      [- தாயுமானார்]

அன்பிற்குரியீர்! வணக்கம் திருவாசகம் பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறை ஆகும். சிவஞான போதம் எட்டாம் சூத்திரம் 

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் 
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அண்ணியம் இன்மையின் அரன் கழல் செலுமே.

என்பதற்கேற்ப  இலக்கியமாய் எட்டாம் திருமுறையாகத்  திகழ்கின்றது திருவாசகம் . இதனை யான் உணர்வதற்கு எனக்குத் தீட்சா குருவாகி வந்து என்னைத் தன் கருணைத் திறத்தால் ஆட்கொண்டவர் அருட்குருநாதர் ஒளியரசு ஐயா ஆவார்கள். 
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
 ( திருமந்திரம் - 139 )

திருவருள் மற்றும் குருவருள் திறத்தால் யான் திருவாசகம் பற்றி உணர்ந்தவற்றை, உணர்த்தப் பட்டதைத் தங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்வடைகிறேன்,  இத் தொடரில் ஏதேனும் சிறப்பிருந்தால் அது திருவருளுக்கும் குருவருளுக்குமே உரியது. இதில் உள்ள குறைகள் அனைத்துமே என்னுடையது. குறையைப் பொறுத்து, குணத்தை ஏற்குமாறு அன்பர்கள் நண்பர்கள் அனைவரின் பாதங்களை மனம், மொழி மெய்களால் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன். இத் தொடரினைப் பற்றித் தங்களின் மேலான கருத்துகளை பதிவித்திட அன்புடன் வேண்டுகிறேன். 

மணிவாசகரின் திருவாசகம்” பற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் 
அகவல்
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ 
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின் 
வேதம் ஓதின் விழிநீர்பெருக்கி
நெஞ்சநெக் குருகிநிர்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகால் ஓதின் 
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் 
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய 
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுநர் அன்றி 
மன்பதை உலகின்  மற்றையர் இலரே!. 

என்று சிறப்பித்து போற்றுகின்றார். மேலும் இதன் சிறப்பினை தனிப்பாடல் ஒன்று

வள்ளுவர் நூலன்பர் திருவாசகந்தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - யொள்ள்யசீர்த்
தொண்டர் புராணாந் தொகச் சித்தி யோராறுந்
தண்டமிழின் மேலாந் தரம். 

என்று போற்றுகின்றது
பொருள் : தண்டமிழின் மேலாந்தரமாகக் கொள்ளக்கூடிய ஆறு நூல்களைப் பட்டியல் இடுகின்றது. அவையாவன: 
(1) வள்ளுவர் நூல் (திருக்குறள்), (2) அன்பர்(மணிவாசகர்) திருவாசகம், 
(3) தொல்காப்பியம் (இலக்கணநூல்), (4) பரிமேலழகர் திருக்குறளுக்குச் செய்த விளக்க உரை நூல், (5) சீர்த் தொண்டர் புராணம்(பெரியபுராணம்) (6) அருணந்தி சிவாச்சியாரியர் செய்தருளிய “சிவஞானசித்தியார்”  

அருட்பிரகாச வள்ளற் பெருமான் இராமலிங்க அடிகளார் “ஆளுடைய அடிகள் அருள்மாலை” என்ற  தொகுப்பில் பத்து பாடல்களில் மணிவாசகரைப் பற்றியும், திருவாசகம் பற்றியும் போற்றிப் பாடுகிறார்கள். 

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே 

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் ஒருவாசகத்தில் 
ஒருமொழியே என்னையுமென் னுடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னிலிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பி அயல் கூறுவதேன் கூறுதயே.

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான 
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே!

மணிவாசகர் திருவடிகள் போற்றி!

திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போறி! போற்றி!                   [ தொடரும் ]

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1