புதன், 16 டிசம்பர், 2009

மார்கழிச் சிறப்பு - பாவை நோன்பு -[01]

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இம் மாதத்தை சைவர்களும், வைணவர்களும் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவர். குறிப்பாக கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர். மணமான பெண்கள் தங்களின் மாங்கல்ய பலம் சிறக்க அவரவர் இஷ்டதெய்வத்தை பூஜிப்பர். இறையன்பர் வாழ்வு என்னும் தூக்கத்தில் இருந்து விடுபட்டு மோட்ச வாழ்வு என்னும் விழிப்பு நிலைக்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பாடல்கள்மூலம் வேண்டுவர்.ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை தினம் ஒன்றாக பார்ப்போம்.
திருவெம்பாவை-முதற்பாடல்

[இதனை சைவசமய குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளினார். இப்பகுதியில் இருபது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி சக்தியை வியந்தது எனப்படும். உமையம்மையைப் பாவை வடிவில் கண்டு அவ்வம்மையின் பண்புகளை வியந்து போற்றுவதாகும். ]

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

தூக்கம் கலைந்து ஆற்றில் அல்லது குளத்தில் குளிக்கச் செல்லும் பெண்கள், தம் தோழி ஒருத்தியின் தூக்கத்தை கலைத்து, அவளைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவளுடைய வீட்டிற்கு வருகின்றனர். அவளோ ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறாள்.வந்துள்ள தோழியர், ” திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள நம்மிறைவர்,முதலும் முடிவும் அற்றவர். அருமைவாய்ந்த பேரொளிப் பிழம்பானவன்.அவனுடைய பெருமையினை நாங்கள் உன்னுடைய வீட்டின் முன்னேயிருந்து இனிமையாகப் பாடக்கேட்டேயும்,
வாள்போன்ற கூர்மையான பெரிய கண்களையுடைய பெண்ணே தூக்கம் கலைந்து எழவில்லை.இன்னும் ஏனோ தூங்குகின்றாய். உன்காதுகள்
கொடுமையான காதுகளா?சிவனின் திருவடிப் பெருமைகளை வாழ்த்திய வாழ்த்தொலிகள் தெரு முழுதும் ஒலிக்கிறது ” என்று கூறினர்.

நீ, மலர் பரப்பிய படுக்கையின்மேல் புரண்டு எழுந்து தேம்பித் தேம்பி அழுது தன்னையே மறந்திருப்பாயெனக் கூறினர். ஆனால் நீயோ ஒன்றுக்கும் முடியாமல் கிடக்கிறாயே! இதுவோ உன் தன்மை.


திருப்பாவை - முதற்பாடல்


[ திருமாலே தனக்கு கணவராக வேண்டிய ஆண்டாள்,மார்கழி மாதத்தில் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இச்சமயத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை. முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தைச் சொல்கிறது. இரண்டுமுதல் ஐந்து பாடல்கள் திருமாலின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறுமுதல் பதினைந்து பாடல்கள் அடியார்களைத் தோழிகளாக பாவித்துஅவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்வதைக் கூறுகிறது. பதினாறுமுதல் முப்பது பாடல்கள்
தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு ஆண்டாள் பெருமாளைக் கெஞ்சுகிறாள்.]


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


( மதி-புத்தி; பறை-பரிசு {இங்கு இறைவனுடன் இரண்டறக் கலப்பதாம்})

கண்ணனே நிரந்தரமானவன். அவனது திருவடியையே சரணம் என்று எண்ணி மாதங்களிலே சிறந்த மார்கழியிலே விடியற்காலையில் நீராடப்போகும் பெண்களே! நந்தகோபன் மகனும், யசோதை அன்னையின் இளமையான, வலிமையான சிங்கம் போன்றவனும், கரிய உடலும்,சிவந்த குளிர்ச்சியான முகத்தினை உடையவனுமாகிய நாராயணனே நம்மனைவருக்கும் சிறந்த பரிசளிப்பான். அப்படிப்பட்ட கண்ணனை உலகோர் புகழுமாறு பாடிப் போற்றுவோமாக.




கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1