புதன், 16 டிசம்பர், 2009

பாவை நோண்பு-தொடர்ச்சி - [02]


திருவெம்பாவை - இரண்டாம் பாடல்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரியிழையாய் நேரிழையீர்
சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிட மீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.


ஒளி வடிவாகிய பரமனைப் பற்றி நாம் இரவும் பகலும்பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம் உன்னுடைய பற்றுதல் எல்லாம் அவனுக்கே உரியது என்று சொல்லிக்கொண்டிருந்தாய். நல்ல நகையணிந்துள்ள பெண்ணே, இப்பொழுது மலர்ப் படுக்கையின்மீது உனக்குப் பற்றுதல் வந்ததோ?

நல்ல ஆபரணங்களை அணிந்த தோழியரே, வேண்டாம், வேண்டாம். இப்படிப் பேசிப் பரிகசித்து விளையாட நேரமும், இடமும் இதுவல்ல. அறிவிற்சிறந்த விண்ணோர்களும், பரமனைப் போற்ற தாங்கள் தகுதியற்றவர் என தயங்கிப்பின் வாங்குகின்றனர். அத்தகு ஒளிவடிவானவன், சிவலோகநாதன்,தில்லைச் சிற்றம்பலத்துக்கு ஈசன் நம்மைக் காத்தருள வந்து காத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றிய உணர்வு சிறிதுமின்றி, மேலோட்டமான அன்புடைய நாம், அவனைப் போற்ற வல்லவரோ? தோழியே! எண்ணிப் பார்!



திருப்பாவை - இரண்டாம் பாடல்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்னோம் பலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டுநாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


விரதம் இருப்பது எப்படியென்று பின்வருமாறு ஆண்ட்டள் கூறுவதாக இப்பாடல் விளக்குகிறது.

[01] பாற்கடலில் பாம்பணையில் அறிதுயில் கொண்டுள்ள திருமாலின்
புகழ் பாடவேண்டும்.
[02] கொழுப்புச்சத்து மிகுதியாகயுள்ள நெய், பால் போன்றவற்றை
உண்ண மாட்டோம்.
[03] விடியற்காலையிலே துயில் எழுந்து நீராடுவோம்.
[04] கண்மையிட்டுக் கொள்ள மாட்டோம்.
[05] நல்ல வாசனையுள்ள மலரினைச் சூடமாட்டோம்.
[06] செய்யக்கூடாதச் செயல்களைச் செய்ய மாட்டோம்.
[07] நல்லன அல்லாத, மனத்தினை கெடுக்கும் நூல்களைப் படியோம்.
[08] சிரமப் படுவோர்க்கு இயன்ற உதவிகளைச் செய்வோம்.

இப்படிக் கட்டுப்பாடுடனும் தர்மம் செய்தும் விரதமிருந்து திருமாலின் புகழைப் பாடுவோம் என்கிறாள் ஆண்டாள்.




கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1