திருப்பள்ளியெழுச்சி - ஐந்தாம் பாடல்
பூதங்கள் தோறும் நின்றாய் எனில் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்த ருளாயே.
எம்பெருமானே! விண், மண், நீர், தீ, காற்று என ஐம்பெரும் இயற்கைக் கூறுகளாய் நிலைத்தவன் நீ என்பதைத் தவிர உனக்கென்று போக்கென்பதும், வரவு என்பதும் இல்லாதவன் என்று சொல்லிக் கற்றவர் எல்லாம் பண்ணிசையோடு பாடல்களைப் பாடினர். பரவசமடைந்து ஆடினர். அவற்றையல்லாமல், உன்னை முழுமையாகக் கண்டு உணர்ந்தவர் என்று ஒருவரையேனும் நாங்கள் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஏனெனில், நீ மனத்தாலும் எண்ணிப் பார்ப்பதற்கு அரிய பொருளாக விளங்குபவன். திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்களுக்கு காட்சியளித்து, எங்கள் குறைகளை அகற்றி எங்களை, எங்களை ஆட்கொண்டருள் புரிக.
திருப்பாவை - இருபத்து ஐந்தாம் பாடல்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதில் யாகில்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தேவகிக்கு மனாகப் பிறந்து, அன்றிரவே வேறு யாரும் அறியாதவாறு ஒளித்து வந்து யசோதையால் வளர்க்கப்பட்டவனே! கம்சன் உன் மீது ஆத்திரம் கொண்டு உனக்கு தீங்கு நினைத்தான்.அவன் வயிற்றில் நெருப்பெரிவதைப் போன்ற பயத்தை உண்டாக்கினாய். ஆயர்பாடியில் வளர்ந்து நின்ற நெடிய திருமாலே! உன்னைப் போற்றிப் பாட இங்கு வந்தோம். நாங்கள் விரும்பியபடியே செல்வத்தையும், அதனைக் காக்கும் வீரத்தையும் தருக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக