திங்கள், 26 ஏப்ரல், 2010

திருவாசகம்- திருச்சதகம்



திருப்பெருந்துறையில் அருளியது
பக்தி வைராக்கிய விசித்திரம்
(01) மெய்யுணர்தல்
திருச்சிற்றம்பலம்


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன் விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டுகொள்ளே. (01)

நறுமணம் நிறைந்த உனது திருவடியை நாடுகின்ற எனக்கு உடல் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது . ணர்ச்சி வேகத்தால் அது நடுநடுங்குகிறது. என் கைகள் இரண்டையும் தலையில் வைத்து உன்னை வணங்குகிறேன். கண்ணீர் பொங்கி வருகிறது. உள்ளத்தில் இளஞ் சூடு தட்டுகிறது. அவ்வுள்ளத்தை உனக்கே கோயில் ஆக்கியதால் நிலையற்ற உலக விஷயங்கள் எல்லாம் பறந்தோடுகின்றன. வாயால் உன்னைப் போற்றுகிறேன். உன்னை நினைத்துப் போற்றி, சய சய  போற்றி, என்று வழிபடும்  என்னுடைய நிலைப்பாட்டை நீ கவனித்து, உன்னன்பருள் ஒருவனாக ஏற்றுக் கொள்.

கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே. (02)

எங்கள் மேலானவனே! எங்கள் தலைவனே! உன்னுடைய திருவருளாலே அடியேன் இருக்கப் பெறுவேனாயின், இந்திரனும், திருமாலும், நான்முகனும் ஆகியவருடைய பதவிகளை ஒரு பொடுட்டாக என் உள்ளத்தில் கொள்ள மாட்டேன். என்குடி குடியானது முற்றிலுமாக அழிந்தாலும், உன்னுடைய அடியவரொடு அல்லாமல் பிறை எவரொடும் தொடர்பு கொள்ள மாட்டேன்.  நரகிற்குச் சென்றாலும், அதனை இகழ மாட்டேன். மேலானவனே! உன்னைத் தவிர மற்றத் தெய்வங்களை நான் நினைக்க மாட்டேன்.

உத்தமன் அனத்தன்  உடையான்
அடியே நினைந்து  உருகி
மத்தம் மனத்தொடு மால்இவன் 
என்ன மனம் நினைவில் 
ஒத்தன சொல்லிட 
ஊரூர் திரிந்து எவரும்
தம்தம் மனத்தன பேச 
எஞ்ஞான்று கொல் சாவதுவே. (03)

இறைவா! உன்னை எல்லோருக்கும் மேலானவன் என்றும், அப்பன் என்றும், என்னை உடையவன் என்றும்சொல்லிக்கொண்டு நான் திருத்தலங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும். உன் நினைவில் பித்தம் பிடித்தவனாக வேண்டும். நான் மயக்கத்தில்  இருப்பதாக ஊரவர் அவரவர்க்குத் தோன்றியதைப் பேசுவார்கள். நான் அவைகளைப் பொருட் படுத்தாது சிவவானுபவத்தில் திளைத்து இருப்பேனாக. 

சாவ முன்நாள் தக்கன் வேள்வித்
தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய்என்று அவிதா  
இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் 
எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து 
என்னபாவம் திரிதவரே. (04)



முன்னாளில், தக்கன் நடத்திய யாகத்தில் கொல்லப்பட்ட ஆட்டிறைச்சியயை நான்முகனும், மாலும் உண்டனர். அதற்காக வீரபத்திரன் அடிக்க வந்த போது அலறியபடி ஓடினர். பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட நஞ்சினைக் கண்டு பயந்து உன்னைச் சரணடைந்து ‘எம் தந்தையே எம்மைக் காக்கவும்’ என் அபயக் குரல் கொடுத்தனர். அவ்விருவரும் எம்மைப் போன்றவரே. அத்தகையவரான எம்பிரானாகிய உன்னோடும் சேர்த்து ‘மும்மூர்த்திகள்’ என சொல்வதற்கு உரியவரா? அவ்விருவரும் விண்ணுலகை ஆண்டு கொண்டு, மண்ணுலகில் தேவர் என்று சொல்லிக் கொண்டு கர்வமுற்றுத் திரிகின்றனரே! அவ்வாறு கர்வமுற்றுத் திரிய அவர் செய்த பாவம்தான் காரணமோ?

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு
முட்டாது இறைஞ்சேன் 
அவமே பிறந்த அருள்விணையேன்
உனக்கு அன்பர் உள்ஆம் 
சிவமே பெறும்  திரு எய்திற்றிலேன்
நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு 
எம் பராபரமே. (05)

இறைவனே! நான் தவமே செய்யவில்லை; குளிர்ச்சி பொருந்திய மலர்களைத் தூவி முறையாக உன்னைப் போற்ற வில்லை; வீணில் பிறந்த தீவினை உடையேன் நான்; அடியவர்க்குச் சொந்தமாகிய அழியாத சிவபோகச் செல்வவத்தை நான் பெறவில்லை; எல்லோருக்கும் மேலான  பரம்பொருளே! உன் அடியவனாகிய எனக்கு உன் மேலான திருவடிப் பேற்றை அருள்க!

பரந்து பல் ஆய் மலரிட்டு
முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்
என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின் தன் 
வார் கழற்கு அன்பு எனக்கும் 
நிரந்தரமாய் அருளாய் நின்னை
ஏத்த முழுவதுமே. (06)

 பல்வேறு இடங்களுக்குச் சென்று  விதவித மலர்களால் கவனமாய் எடுத்து விரிவாகவும், முறையாகவும் உன்னை வழிபடுகின்றனர். உன்னருளால் வேண்டியவற்றை எல்லாம் பெறலாம் என்ற தெளிவு அவர்களுக்கு உண்டாகிறது. அப்படிப் பட்டவர் உள்ளத்தில் நீ ஒளிவீசுகிறாய். மற்றவர் மனங்களில் கள்ளன் போன்று நீ மறைந்து நிற்கிறாய். இடைவிடாமல் உன்னை நாள் முழுவதும் வழிபடுவதற்கு அருள்வாயாக. 

முழுவதும் கண்டவனைப் படைத்தான்
முடிசாய்ந்து முன் நாள்
செழும் மலர் கொண்டு எங்கும் தேட 
அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம்
ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம்
மேற்கொண்டு உழி தருமே. (07)
எல்லா உலகங்களையும், உலகங்களின் எல்லாப் பொருள்களையும் படைத்த பிரமனை உந்தித் தாமரையில் பிறப்பித்த திருமால் தன் தலையைக் கீழ் நோக்கிப் பேரூக்கத்துடன் தேடியும் அவனுக்கு உந்திருவடிகள் தெரியவில்லை.
அப்படிப்பட்ட நீ இங்கு சுடுகாட்டிடை பேய்களுடன் கூடி கூத்தாடுகின்றாய். குற்றமற்றவனாய்ப் புலித்தோலை இடையில் உடுத்திக் கொண்டு, பெரும் பித்தனாய் எவ்விடத்தும் அலைவது என்னே!
உழிதரும் காலும் கனலும் 
புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக்காலம்
வருவது வந்தபின் 
உழிதரு காலத்த உன் அடியேன்
செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய் அவை காத்து
எம்மைக் காப்பவனே! (08) 


வீசுகின்ற காற்றும், நெருப்பும், நீரோடும் மண்ணும் விண்னும் ஆகிய ஐம்பூதங்களும் எல்லாம் அழிக்கிற ஊழிக் காலம் எக்காலத்தில் வந்து சேரும்? அக்காலத்திற்குப் பின், நிலைத்த தன்மையாய் விளங்குகின்ற காலத் தத்துவத்திற்குத் தலைவனே! உன்னடியவனாகிய நான் செய்த தீவினைகளைப் போக்கி அருள்வாயாக. வினையும் காலமும் எம்மை வந்து பாதிக்காத வண்ணம்  காப்பாயாக.

பவன் எம்பிரான் பணி மாமதிக் 
கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டு
கொண்டான் என்சிறுமை கண்டும்
அவன் எம்பிராண் என்னை நான் 
அடியேன் என்ன இப்பரிசே 
புவன் எம்பிரான் தெரியும்
பரிசு ஆவது இயம்புகவே!  (09)

உலகங்களுக்கெல்லாம் தலைவன் , சந்திரனைத் திருமுடியில் மாலையாகச் சூடியவன், தேவர்களுக்கு எல்லாம் தலைவன், மங்களமானவன், மங்களத்தையேச் செய்பவன், என்னுடைய சிறுமைக் குணம் கண்டும், என் தலைவன் என்னை ஆட்கொண்டான். அவன் ஆண்டானாகவும், நான் அடிமையாகவும் உள்ள இத் தன்மையே அவனது பெருமிதத் தன்மையென்று தெரியுமாறு சொல்லுகவே.

புகவே தகேனுனக் கன்பருள்
யானென்பொல் லாமணியே
தவே யென்னையுனக் காட்கொண்ட
தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப்
பணித்திஅண் ணாவமுதே
நகவே தகும்எம் பிரானென்னை
நீ செய்த நடகமே. 

பூரணனே , உன்னடியார் கூட்டத்தில் நுழையவே நான் சிறிதேனும் தகுதி அற்றவன். அப்படிப்பட்ட என்னையும் நீ ஆட் கொண்டது உன் முறைக்கே தகும். கீழோரான மண்ணுலக மக்களை நீ மேலோராக மாற்றுகிறாய். விண்னுலகத் தேவரை  அவர் வணங்குமாறு செய்கின்றாய். அப்பனே! அமுதமே! இறைவா! நீ செய்த கூத்தும் என்னே! உன்னுடைய இத்தகு திருவிளையாடல் வியப்புக்கு உரியது அன்றோ?


  


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1