செவ்வாய், 21 மார்ச், 2017

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

திருவாசகத் தேன் - தொடர் - 1

திருச்சிற்றம்பலம்


“பாழான என்மனம் குவிய ஒருதந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ”                                                                                      [- தாயுமானார்]

அன்பிற்குரியீர்! வணக்கம் திருவாசகம் பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறை ஆகும். சிவஞான போதம் எட்டாம் சூத்திரம் 

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் 
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அண்ணியம் இன்மையின் அரன் கழல் செலுமே.

என்பதற்கேற்ப  இலக்கியமாய் எட்டாம் திருமுறையாகத்  திகழ்கின்றது திருவாசகம் . இதனை யான் உணர்வதற்கு எனக்குத் தீட்சா குருவாகி வந்து என்னைத் தன் கருணைத் திறத்தால் ஆட்கொண்டவர் அருட்குருநாதர் ஒளியரசு ஐயா ஆவார்கள். 
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
 ( திருமந்திரம் - 139 )

திருவருள் மற்றும் குருவருள் திறத்தால் யான் திருவாசகம் பற்றி உணர்ந்தவற்றை, உணர்த்தப் பட்டதைத் தங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்வடைகிறேன்,  இத் தொடரில் ஏதேனும் சிறப்பிருந்தால் அது திருவருளுக்கும் குருவருளுக்குமே உரியது. இதில் உள்ள குறைகள் அனைத்துமே என்னுடையது. குறையைப் பொறுத்து, குணத்தை ஏற்குமாறு அன்பர்கள் நண்பர்கள் அனைவரின் பாதங்களை மனம், மொழி மெய்களால் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன். இத் தொடரினைப் பற்றித் தங்களின் மேலான கருத்துகளை பதிவித்திட அன்புடன் வேண்டுகிறேன். 

மணிவாசகரின் திருவாசகம்” பற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் 
அகவல்
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ 
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின் 
வேதம் ஓதின் விழிநீர்பெருக்கி
நெஞ்சநெக் குருகிநிர்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகால் ஓதின் 
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் 
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய 
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுநர் அன்றி 
மன்பதை உலகின்  மற்றையர் இலரே!. 

என்று சிறப்பித்து போற்றுகின்றார். மேலும் இதன் சிறப்பினை தனிப்பாடல் ஒன்று

வள்ளுவர் நூலன்பர் திருவாசகந்தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - யொள்ள்யசீர்த்
தொண்டர் புராணாந் தொகச் சித்தி யோராறுந்
தண்டமிழின் மேலாந் தரம். 

என்று போற்றுகின்றது
பொருள் : தண்டமிழின் மேலாந்தரமாகக் கொள்ளக்கூடிய ஆறு நூல்களைப் பட்டியல் இடுகின்றது. அவையாவன: 
(1) வள்ளுவர் நூல் (திருக்குறள்), (2) அன்பர்(மணிவாசகர்) திருவாசகம், 
(3) தொல்காப்பியம் (இலக்கணநூல்), (4) பரிமேலழகர் திருக்குறளுக்குச் செய்த விளக்க உரை நூல், (5) சீர்த் தொண்டர் புராணம்(பெரியபுராணம்) (6) அருணந்தி சிவாச்சியாரியர் செய்தருளிய “சிவஞானசித்தியார்”  

அருட்பிரகாச வள்ளற் பெருமான் இராமலிங்க அடிகளார் “ஆளுடைய அடிகள் அருள்மாலை” என்ற  தொகுப்பில் பத்து பாடல்களில் மணிவாசகரைப் பற்றியும், திருவாசகம் பற்றியும் போற்றிப் பாடுகிறார்கள். 

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே 

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் ஒருவாசகத்தில் 
ஒருமொழியே என்னையுமென் னுடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னிலிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பி அயல் கூறுவதேன் கூறுதயே.

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான 
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே!

மணிவாசகர் திருவடிகள் போற்றி!

திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போறி! போற்றி!                   [ தொடரும் ]

திருச்சிற்றம்பலம்

திங்கள், 20 மார்ச், 2017

திருக்கழுக்குன்றம் பதிகம் - திருஞான சம்பந்தர்

அருள்தரு திரிபுரசுந்தரி உடனுறை அருள்தரு வேதகிரீஸ்வரர் துணை

தோடுடையான் ஒருகாதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும் 
நாடுடையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே!
                                                                                    (  - 1-103-1 ) பண்:  குறிஞ்சி

பொருள் : ஒரு காதில் தோடும், ஒருகாதில் குழையும் அணிந்து உமை ஒரு பாகனாக விளங்குகின்றான். ஏடுகளை கையில் கொண்ட நான்முகம் கொண்ட பிரமனின் தலை ஓட்டினை பிச்சைப் பாத்திரமாக கையில் ஏந்தி பிச்சை ஏற்றுக் கொண்டு வருகின்ற நாட்டை உடைமையாகக்  கொண்டவன். மகா பிரளய காலத்தில் சுடுகாட்டில் நடனமாடுகின்றான். இத் தன்மைகளை உடைய எம்பெருமான் சிவன் அன்பினால் விரும்பி கோயிலில் உறைகின்ற இடம் திருக்கழுக்குன்றமே!

திங்கள், 1 ஜூன், 2015

தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சிவபோக சாரம்” பாடல் எண் -12 :




தன்பெருமை எண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாம்சகத்தை வேண்டாமை - தன்பால்
உடலைத் தினம் பழித்தல் ஓங்கு சிவத்து ஒன்றல்
நடலைப் பிறப்பொழிய நாள்.

பொருள்: தன் பெருமையினைத் தான் எண்ணாத பணிவும், தன்முனைப்பாகிய சீவபோதம் நீங்குதலும், மின்னுப்போலக் கடித்ற் தோன்றி மாய்தலையே பெருமையாக உடைய உலகத்தின் நிலையாமையை நோக்கி அதனை விரும்பாமையும், தன்னிடத்து உள்ள உடம்பை அதன் புன்மை நோக்கி எஞ்ஞான்றும் அருவருத்து ஒழுகுதலும், பெரும் பொருளாகிய சிவத்தில் மனம் பதிதலுமாகிய இவை தோன்றுங் காலமே துன்பத்தைத் தரும் பிறவி நீங்குங் காலம். 

சிவாயநம! சிவாயநம! சிவாயநம!

திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!

வியாழன், 28 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிற்றம்பலம்.

 [7] திருக்கோளிலி
(திருக்குவளை)

இறைவர் பெயர் : பிரமபுரீசுவரர் - கோளிலி நாதர் - கோளிலிநாதேஸ்வரர்
இறைவி பெயர் : வண்டமர் பூங்குழலி
தலமரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் - இந்திர தீர்த்தம் - விநாயக தீர்த்தம் - சக்தி தீர்த்தம்.
வழிபட்டோர்: பிரமன் - திருமால் - இந்திரன் - அகத்தியர் - முசுகுந்த சக்ரவர்த்தி - பஞ்ச பாண்டவர்கள் - நவக்கிரகங்கள் - ஹேமகாந்த மன்னன்

தேவாரப் பாடல்கள்:
சம்பந்தர் :
  1. நாளாய போகாமே ... 1 / 62
அப்பர் :
  1. மைக்கொள் கண்ணுமை ...  5 / 56
  2. முன்ன மேநினை யாதொழிந் ... 5 / 57

சுந்தரர்:

  1. நீள நினைந்தடி யேனுமை ... 7 / 20
சிறப்புகள் :
  •  இத்தலம் மக்கள் வழக்கில்  “திருக்குவளை” என்று வழங்கப்படுகிறது.
  • நவக்கிரகங்கள் முதலியோஉக்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால்  “கோளிலி” என்று பெயர் பெற்றது. 
  •  “கோளாயாய” நீக்குமவன் கோளிலி எம்பெருமான்” என்பது சம்பந்தர் வாக்கு.
  • பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரம்மஹத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
  • முன் கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரம்மஹத்தி உருவமும் உள்ளது.
  • குண்டையூரிலிருந்த வேளாண் செல்வராகிய குண்டையூர் கிழார், ஆளுடைய நம்பியாரிடம் அளவற்ற அன்புடையவராய் அவருக்கு வேண்டிய செந்நெல், பருப்பு முதலியவற்றை அனுப்பி வந்தார். மழியின்றி வளம் பொய்த்துப் பஞ்சம் வரவே, அவ்வாறு செய்ய முடியாமல் அவர் வருந்தவே, சிவபெருமான் குவியல், குவியலாக அவர்பால் நெல் நிரப்பும்படி அருள் செய்தா. குண்டையூர் கிழார், பெருமானது திருவருளை வியந்து தொழுது ஆளுடைய நம்பிக்குச் செய்தியைக் கூறி அந்நெல்லை எடுத்துச் செல்லப் பலபல ஆள்கள் வேண்டும் என்றார். உடனே நம்பி அரூரர் திருக்கோளிலிக்கு வந்து “நீள் நினைந்தடி யேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பாடவே, சிவ பெருமான் ஓர் இரவில் தம் பூதகணங்களைக் கொண்டு அத்தனை நெல்லையும் பரவையார் திருமாளிகையில் சேர்க்கச் செய்தருளினார். இன்றும் இந்நிகழ்ச்சி ஒருவிழாவாக இவ்வூரில் நடைபெறுகிறது.
  • மதுரையில் உள்ள சிவபெருமானை குண்டையூர் கிழார் தரிசிக்க விரும்ப, இறைவனும் இத்தலத்திலேயே மதுரை சோமசுந்தரக் கடவுளாக தரிசனம் தந்தார்.
  • இராமலிங்க அடிகளும் இத்தலத்துப் பெருமானிப் பாடியுள்ளார்.
  • இத்தலத்தில் நவக்கிரகங்க்ளும் வக்கிரமின்றி தெற்கு நோக்கி உள்ளன.
  • இத்தலத்தில் உள்ள மூலவர் வெண்மணலால் பிரம்மனால் கூப்பி செய்து பூஜிக்கப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அர்த்த சாம வழிபாட்டின்போது சம்பிராணி தலத்தை அருகம்புல்லால் தடவுவர். மற்றைய அபிடேகங்கள் குவளை சாத்தியே செய்யப்படுகிறது.
  • சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்கு சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.
  • இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகார்ண்யம் (தேற்றாவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களும் உண்டு.
  • இத்தலத்தல்ம் ஸப்த விடங்கர்த் தலங்களுள் ஒன்று. அவணி விடங்கத்தலம்; நடனம் - பிருங்க நடனம். பிருங்கம் என்றால் வண்டு என்று பொருள். வண்டு மலரை சுற்றி, சுற்றி வந்து மலரில் அமர்வது போல சுழன்றும், நிலைக்கு வந்தும் ஆடும் நடனம்.
  • இக்கோயிலில் 19- கல்வெட்டுகள் - சோழ்ர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • கல்வெட்டுகளில் இறைவன்  “திருக்கோளிலி உடைய நாயனார்” என்றும் “அவணி விடங்கத் தியாகர்” என்றும் குறிக்கப்படுகின்றார்.
அமைவிடம் : திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருஆரூரிலிருந்து 19-கி.மீ. தொஅலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.

தரிசன நேரம் : மு.ப. 7.00 -12.30 & பி.ப. 4.30 - 8.45

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிற்றம்பலம்

[6] திருநாகைக்காரோணம்
இறைவர் பெயர் : காயாரோகணேஸ்வரர் - ஆதிபுராணர்
இறைவி பெயர் : நீலாயதாட்சி - கருந்தடக்கண்ணி
தலமரம் : மாமரம்
தீர்த்தம் : தேவ தீர்த்தம் - புண்டரீகத் தீர்த்தம்
வழிபட்டோர் : ஆதிசேஷன் - புண்டரீக முனிவர் - அகத்தியர் - அம்பிகை - முருகன் - திருமால் - வசிட்டர்-முசுகுந்த சக்ரவர்த்தி - அரசகேசரி - விசித்திரகவசன் - விரூரகன் - பத்திரசேனன் - பாற்கரன் - மித்திரன் - காளகண்டன் - சண்டதருமன் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் : 
சம்பந்தர் : 
  1. புன்னையும் விரிகொன்றை ...  1 / 84
  2. கூனல்திங்கட் குறுங்கண்ணி ... 2 / 116
அப்பர்: 
  1. மனைவி தாய் தந்தை ... 4 / 71
  2. வடிவுடை மாமலை ... 4 / 103
  3. பாணத்தால் மதில் ... 5 / 83
  4. பாரார் பரவும் ...  6 / 22
சுந்தரர் :
  1. பத்தூர்க் கிரந்துண்டு ... 7 / 
சிறப்புகள் :
  • இது ஆதி சேஷனால் பூஜிக்கப்பெற்றதால், நாகை என்ப் பெயர் பெற்றது.
  • அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று. 
  • அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்தில் உதித்த அதிபத்த நாயன்மாரின் அவதாரத் தலம்.
  • புண்டரீக முனிவரி இறை தனது தேகத்தில் ஆரோகரணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் என்று பெயர். இது மருவி காரோணம் என்றாயிற்று. 
  • காரோணம் என்ற பெயருடைய திருக்கோயில்கள் மூன்று உள்ளன.
  • அவையாவன: (1) கச்சிக்காரோணம்; (2) குடந்தைக்காரோணம்; (3)நாகைக்காரோணம்.
  • ஆதிபுராணம் - சிவராசதானி - பார்ப்பதீச்சரம் - அரவநகரம் - முதலிய பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகிறது.
  • அகத்தியருக்குத் திருமணக்காட்சி நல்கிய தலம். 
  • ஸப்த் ரிஷிகளுக்கு இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சிக் கொடுத்தத் தலம்.
  • சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
  • சுந்தரருக்கு இறைவன் குதிரை - முத்துமாலை - நவமணிகள் - பட்டு - சாந்தம் - சுரிகை முதலானவை வழங்கியத் தலம்.
  • ஸப்த விடங்கர்த்தலங்களுள் ஒன்று. 
  • தியாகராஜர் - சுந்தர விடங்கர்; நடனம் - பாராவாரதரங்க நடனம். பாராவாராம் = கடல்; தரங்கம் = அலை; அஃதாவது கடலைப்போன்று  எழுந்து சுருண்டு மடங்கி விழுந்தாடும் நடனம்.
  • கயிலையும், காசியையும் போன்று இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது. 
  • மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் தலம்.
  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.
  • இத்தல இரதம் கண்ணாடித் தேராகும்.
  • ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் அவை.
  • சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியது.
  • நாகப்பட்டிணத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னிகையை கூடிப் பெற்ற புதல்வனே தொண்டைநாட்டை ஆண்ட இளந்திரையன் எனப்  “பத்துப்பாட்டால்” அறிகிறோம்.
  • குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனaக் கூறப்படுகின்றது.
  • நரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
  • வைகாசியில் பிரமோற்சவமும், ஆடி, தை அமாவாசை, மாசி மகம் அதிபத்தர் திருவிழா ஆகிய நாள்களில் சுவாமி கடலில் தீர்த்தவாரி அருளுகின்றார்.
  • நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்டது. இந்நூல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்று 1860 - இல் அரங்கேற்றப்பெற்றது.
அமைவிடம் : நாகப்பட்டிணம் இரயில் நிலையத்திலிருந்து இக்கோயில் 2.கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், திரிச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தரிசன நேரம் : மு.ப. - 6.00 - 12.00 & பி.ப. 4.30 - 8.00

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிறம்பலம்
[5] திருவாய்மூர்
இறைவர் பெயர் : வாய்மூர் நாதர்
இறைவியார் பெயர் : பாலின் நன்மொழியாள்.
தலமரம் : பலா
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன்

தேவாரப்பாடல்கள்:
 சம்பந்தர் : 
  • தளிரிள வளரென உமை ... 2 / 111
அப்பர் : 
  • எங்கே என்னை .... 5 / 50
  • ப்பாட அடியார் .... 6 / 77
தலவரலாறு:
  • திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து  “திருநாவுக்கரசரை”த்  “திருவாய்மூருக்கு” வா என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத் திருத்தலம்.
  •  “திருஞானசம்பந்தருக்கு” ஈசன் அம்பிகையுடன் இருந்து நடனக் காட்சி நல்கியத் திருத்தலம்.
  • முசுகுந்த சக்ரவர்த்தியால் எழுந்தருளப்பட்ட ஏழு தியாகேச விடங்கத் தலங்களுள் ஒன்று.
  • தியாகேசர் - நீல விடங்கர்; நடனம் - கமல நடனம். அதாவது நீரில் மலர்ந்துள்ள தாமரை மலர் நீரின் அசைவிற்கேற்ப அசைவது போன்றது. கமலம் என்பது தாமரை மலரைக் குறிப்பதாகும்.
  • இத் தலம் சூரியன் வழிபட்டத் தலம். பங்குனி மாதத்தில் குறிப்பீட தேதிகளில் சூரிய கிரணங்கள் சுவாமிமேல் படுகின்றன. 
  • இவ்வூருக்கு வடமொழியில்  “லீலாஹாஸ்யபுரம்” என்ற பெயரும் உண்டு.
அமைவிடம்: இத் தலத்திற்கு, திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

தரிசன நேரம் : மு.ப. 7.30 - 12.00 & பி.ப.4.00 - 8.30


சப்த விடங்கர்த் தலங்கள்


திருச்சிற்றம்பலம்
[4]திருமறைக்காடு
இறைவர் பெயர் : வேதாரண்யேஸ்வரர் - மறைக்காட்டு மணாளர் 
இறைவி பெயர்: யாழைப்பழித்த மொழியாள்
தல மரம் :வன்னி
தீர்த்தம் : வேத தீர்த்தம் - கடல் துறை - மணிகர்ணிகை - தேவபூஷணம்
வழிபட்டோர் : வேதங்கள் - இராமர் - அகத்தியர் - முசுகுந்த சக்ரவர்த்தி - கௌதமர் - விசுவாமித்திரர் - வசிஷ்டர் - நாரதர் - பிரமன் - கங்கை - காவிரி.

தேவாரப் பாடல்கள் : 
சம்பந்தர் : 
  1.  சிலைதனை நடுவிடை ... 1 / 22
  2. சதுரம் மறைதான் ... 2 / 37
  3. வேயுறு தோளிபங்கன் ... 2 / 85
  4. பொங்கு வெண்மணல் ... 2 / 91
  5. கல்பொலி சுரத்தின் ... 3 / 76
அப்பர் : 
  1. இந்திரனோடு .... 4 / 33
  2. தேரையும் மேல் ... 4 / 34
  3. ஓதாமல் கடல் ... 5 / 9
  4. பண்ணின் நேர் .... 5 / 10
  5. தூண்டு சுடர் ... 6 / 23
சிறப்புகள் :
  • நான்கு வேதங்களும் வழிபட்டதால் வேதாரண்யம் என்னும் பெயர் பெற்றது.
  • அகத்தியருக்கு திருமணக் காட்சி நல்கியத் திருத்தலம்.
  • வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை அப்பரடிகள் திறப்பிக்கவும், திருஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடிய பெருமைப் பெற்றத் தலம்.
  • இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்தத் தலம்.  எனவே இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகின்றது. 
  • இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையிலிருந்த திரியைத் தூண்டி மறு பிறவியில் மாவலிச் சக்ரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • முசுகுந்தச் சக்ரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. 
  • தியாகர் - புவன விடங்கர் - மேனி - மரகத்திருமேனி; - ஆசனம் - இரத்தின சிம்மாசனம்; நடனம் - ஹம்ச நடனம்.அதாவது அன்னம் போல் மெதுவாக அடியெடுத்து வைத்து உடலை அசைத்தாடும் நடனமே அம்ச நடனமாகும்.
  • திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞோதி முனிவரும், தாயுமான சுவாமிகளும் அவதரித்த தலம்.பரஞ்சோதி முனிவரே இக்கோயில் தல புராணத்தை அருளிச் செய்துள்ளார்.
  • இங்குள்ள தீர்த்தம் மணிக்கர்ர்ணிகை. காசியில் உள்ளது போன்று சிறப்பு பெற்றது. 
  • ஆடி,தை அமாவாசை போன்ற புண்ணிய காலங்களில் இன்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடுவது புண்ணியமாகும்.
  • இங்குள்ள தலமரமான வன்னி மரத்தினடியில் விசுவாமித்திரர் தவம் இயற்றியதாக கூறுவர்.
  • சோழர் - விஜய நகர அரசர் கால கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
  • 92 கல்வெட்டுகள் உள்ள கோவில்.
அமைவிடம் : திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில் பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1. கி.மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை, ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம் : மு.ப. 6.30 - 12.00 & பி.ப. 5.00 - 8.30

ஸப்த ஸ்தலங்கள்

திருச்சிற்றம்பலம்

[3]திருக்காறாயில்

இறைவர் பெயர் : கண்ணாயிரமுடையார்
இறைவியர் பெயர் : கைலாசநாயகி
தலமரம்: பலா, அகில், காறாயில்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சேஷதீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன் - முசுகுந்த சக்ரவர்த்தி

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்: நீரானே நீள்சடை ... 2 / 15

சிறப்புகள் :
  • ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று.
  • திர்யாகராஜர் - ஆதிவிடங்கர்.
  • வீர சிங்காதனம்.
  • நடனம் - குக்குட நடனம். கோழி நடனம். கோழி வேகமாகவும், நேராகவும், பக்கவாட்டிலும் ஓடுவது போன்ற நடனம்..
  • இங்குள்ள கடுக்காய்ப் பிள்ளையார் பிரசித்தமானவர்.
  • கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால்  “கண்ணாயிரம் உடையார்” எனப் பெயர் பெற்றார்.
  • இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஓவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப்படுகிறது.
  • இங்குள்ள மரகத லிங்கம் விஷேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம்.
  • பஞ்ச சிவத்தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது.
  • ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கக்கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று.
  • பதஞ்சலி , வியாக்கிரபாத முனிவர்கள் தங்கி இறையருள் பெற்ற தலம்.
  • அகத்திய மாமுனிவருக்கு நாடி சோதிடம் எழுதிட அருள் புரிந்தத் தலம்.
  • புதன் பகவானால் பிரன்னம் செய்யப்பட்டதும்., அஷ்ட திக்குகளிலும் சிவத் தலங்கள் அமைந்து, மகா சிவ சக்கர மையமாகி கபிலமுனிவர் மற்றும் வள்ளலார் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.
  • பன சாரண்யம், காளாகருவனம் என்று புராணங்களில் புனிதப் படுத்தப் பட்டத் தலம்.
அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப்பூண்டு செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.


Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009

Maragatha Lingam, which waas stolen from the Thyagarajaswamy temple ar Tirukaravasal near Tiruvarur in 1992 and recovered by the police recently, was handed over to templ authorities by the idol wing police on Wednesday. - THE HINDU.24-12-2009
தரிசன நேரம் : மு.ப. - 07.00 - 12.00 / பி.ப. - 04.00 - 8.00

திங்கள், 25 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிறம்பலம்

 [2]திருநள்ளாறு

இறைவர் பெயர் : தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவி பெயர் : போகமார்ந்த பூணமுலையாள், பிராணாம்பிகை
தலமரம் : தர்பை
தீர்த்தம் : நள தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம்- பிரம்ம தீர்த்தம் - அகஸ்தியர் தீர்த்தம்.
வழிபட்டோர் : திருமால் - பிரமன் - இந்திரன் - அகத்தியர் - புலஸ்தியர் -                         அர்ச்சுனர் - நளச்சக்ரவர்த்தி - திக்குப்பாலகர்கள் -வசுக்கள் - போஜன் - முசுகுந்த சக்ரவர்த்தி.
தேவாரப் பாடல்கள் :
திருஞானசம்பந்தர் :
                                             (1) பாடக மெல்லடிப் பாவை ... 1 / 07
                                             (2) போகமார்ந்த பூண்முலையாள் ... 1 / 49
                                             (3) ஏடுமலி கொன்றையா ...  2 / 33
                                             (4) தளிரிள வளரொளி ...  3 / 87
திருநாவுக்கரசர் :
                                    (1) உள்ளாறாததோர் புண்டரிகத் திரள் ... 5 / 68
                                    (2) ஆதிக்கண்ணான் முகத்திலொன்று ... 6 / 20
சுந்தர மூர்த்தி நாயனார் :
                                     (3) செம்பொன் மேனிவெண் ணீறணி .... 68

தலவரலாறு
  1.  தர்ப்பைக் காட்டிலிருந்து சுயமாக எழுந்ததால் இவர் தர்பாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
  2. இது நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவன் அருளால், நளன் சனியின் இடர் நீங்கப் பெற்றான்.
  3. திருஞான சம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின் போது, இத்தலப் பதிகமான ”போகமார்ந்த பூண்முலையாள்என்ற பதிகத்தை அனலிலிட , அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது.
  4. இது முசுகுந்த சக்ரவர்த்தி எழுந்தருளுவித்த “சப்த் விடங்கத் தலங்களுள்”  ஒன்றாகும்.
  5. தியாகராஜர் -  “நக விடங்கர்” பச்சை மரகதத்தால் ஆன விடங்கர்- நடனம்- உன்மத்த நடனம். இம்மரகத லிங்கத்திற்கு தினமும் இருகால அபிடேகம் நடைபெறுகின்றது.
  6. நளன் தீர்த்தம், நளன் கலி நீங்கிய தீர்த்தன் என் அழைக்கப்படுகிறது. 
  7. நளன் குளக்கரையில் கலிதீர்த்த விநாயகர் அமர்ந்துள்ளார். அவ்விநாயகர் கோயிலில் உள்ள கிணறில் கங்கை தீர்த்தம் பெருக்கெடுப்பதாக ஐதீகம்.  அந்த கிணற்றுக்கு எதிரில் நந்தி ஒன்றுள்ளது. அக்கிணற்றில் உள்ள நீரை தர்பாரண்யேஸ்வரருக்கு தினமும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்கிறார்கள்.
  8. தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு எதிரே பலிபீடம் சற்று விலகி உள்ளது. கோவிலுக்கு பால் ஊற்றிய இடையனுக்காக பொய் கணக்கு எழுதிய கோயில் கணக்கரைத் தண்டிக்க ஈசன் தன் சூலாயுதத்தை ஏவினார். என்வே பலிபீடம் சற்று விலகி வழிவிட்டது. இன்றும் அந்நிலையிலேயே உள்ளது. கணக்கருடைய மண்டை (தலை) சென்று விழுந்த இடமே மண்டைக் குளம். அது இப்போது மட்டைக் குளம் என்றும் பிரம்மதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
  9. நிடத நாட்டு மன்னன் நளனை சனி பற்ரினான். அதனால் நளன் தன் நாடு- இழந்து மனைவி மக்களை இழந்து, கார்க்கோடன் என்ற பாம்பால் தீண்டப்பட்டு தன் உருமாறி துன்பப்பட்டான். பின்னர் திருநள்ளாறு வந்து நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை வழிபட கோவிலின் உள்ளே சென்றான். சனியும் சிவனுக்காக நளனிடமிருந்து சற்றே விலகி மூன்றாவது கோபுரதிற்கு அருகில் உள்ள மாடத்தில் எழுந்தருளினார். எஅவபெருமானின் அருளாணையின்படி சனி அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி தர்பாராண்யேஸ்வரரை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். 
  10. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டபின்னரே சனீஸ்வரன் சந்நிதிக்கு செல்ல வேண்டும். இத்தலத்தின்  “போகமார்ந்த பூண்முலையாள்” என்ற பதிகத்தைப் பாடி தர்பாரண்யேஸ்வரை வழிபட சனி விலகும்.
  11. இத்தலத்தில் சொர்ண விநாயகர் மற்றும் மூல விநாயகர் என்று இரு விநாயகர்களும், தர்பாராண்யேஸ்வரர் மற்றும் தியாகராஜருக்கருகில் இரு தட்சிணாமூர்த்திகளும், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரு சண்டிகேஸ்வரர்களும் இருப்பது வேறு எந்த சிவாலயத்திலும் காணவியலாத ஒன்று. இக்கோவிலில் உள்ள இடையன் சந்நிதிக்கு எதிரே நந்தி ஒன்றுள்ளது.
  12. இது தருமை ஆதீனக் கோயிலாகும்.
  13. சோழர்கால கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.  

அமைவிடம் : 
  • பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ளது. இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது.
  •  காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. 
  •  தரிசன நேரம் : 06.00 - 12.00 & 04.00 - 9.00                                            



அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1