திங்கள், 3 மே, 2010

திருவாசகம் - திருச்சதகம் (02)



திருச்சிற்றம்பலம்

அறிவுறுத்தல்
(விவேகத்தைப் பெறுதல்)

01 நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான்மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றேஇடைஅறா அன்பு உனக்குஎன்
ஊடுஅகத்தே நின்று உருகத்தந்தருள் எம் உடையானே.

எம்மை அடிமையாகக் கொண்டவனே ! நான் பக்தி பண்ணுவது நாடகத்தில் நடிப்பது போல் நிலை அற்றதாய் உள்ளது. என் இயல்பிற்கு ஒவ்வாததாய் இருக்கிறது. அதற்கு இடையே வீடு பேறு அடைய நான் அவசரப் படுகிறேன். பொன்னும் மாணிக்கக் கல்லும் சேர்ந்த கலவைப் போன்றவனே! இடைவிடாதாஉண்மையான அன்பினை உனக்கு அளித்திட, என்னுள்ளத்தில் தேக்கி, உன்னை எண்ணி எண்ணிக் கசிந்து உருகத் தக்க அருளினை வழங்குவாயாக.





02. யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்

வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம்
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.


தேன்நிறைந்த கொன்றைமலரைச் சூடிய சிவனே! எம்பெருமானே! சிறிதேனும் பிறப்பைக் கண்டு நான் பயப்பட மாட்டேன். இறப்பைக் கண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. வானுலகம் ஆள்கின்ற வாய்ப்பு கிடைப்பினும் அதை விரும்ப மாட்டேன். ஆனால், எம்பெருமானே! என் தலைவனே! உன் திருவருளைப் பெறும் நாள் என்றோ என்றபடியே வருந்துவேனே. 

03. வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான் நாயடியேன்
      இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத் தழும்பேறப்
      பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல்
      வருந்துவனற் றமியேன்மற் றென்னேநான் ஆமாறே.

நாயடியேனாகிய நான், உன் மலரடிகளைக் காண வேண்டி வருந்துகிறேன் அல்லாமல், மணம் பொருந்திய மலர்களை உன்னுடைய திருவடிகளுக்குச் சூட்டினேன் அல்லேன். என் நாக்கில் தழும்பு உண்டகுமாறு உன்னைப் புகழ்ந்து பாடியவன் அல்லேன். பொன்மலையை வில்லாக வளைத்தவனே! நீ உன் அடியவனாகிய எனக்கு அருள் அமுதத்தை வழங்காவிடில் நான் எவ்வித துணையும் இல்லாமல் தனிமையில் துன்பமடைவேன் என்பதைத் தவிர  மற்றபடி என்னால் என்ன செய்ய முடியும்?

04.ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
     பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
     கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
     சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

தேவர்களின் தலைவனே! உன்னுடைய திருவடிக்கே அடிமையாகுமாறு உள்ளம் நெகிழ்ந்தேன் அல்லேன். அன்பால் உருகேன் அல்லன். பூமாலை தொடுத்துச் சூட்டி உன்னை வழிபட்டேன் அல்லேன்.உன்னைப் போற்றிப் பாடினேன் அல்லேன். உன் திருக் கோயிலை தூய்மை செய்தேன் அல்லேன். நீ மகிழுமாறு கூத்தாடினேன் அல்லேன். சதுரப் பாட்டினால் மெய்யறிவுச் சார்ந்தவனே! யான் இறப்பதற்கே விரைவாக ஓடுகின்றேனே.


05  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி 
      ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
      கோனாகி யான்னெதன் றவரவரைக் கூத்தாட்டு
      வானாகி நிறாயை என்சொல்லி வாழ்த்துவனே.

விண்ணாகவும், மண்ணாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலாகவும், உயிராகவும், உண்டு என்பதாயும், இல்லை என்பதாயும், எல்லோருக்கும் தலைவனாகி, நான் எனவும், எனது எனவும் செருக்குற்று இருந்தவரைக் கூத்தாடச் செய்பவனாகிய நிலை பெற்று விளங்கும் பெருமானே! உன்னை நான் என்ன சொல்லி எவ்வாறு வாழ்த்துவேனோ?

06. வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்
      தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச்
      சூழ்த்துமது கரமுலுந் தாரோயை நாயடியேன்பாழ்த்தப்பிறப்
      பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.

வண்டுகள் சூழ்ந்தவாறு ஒலி எழுப்பும் மலர் மாலையை அணிந்தோனே! தாம் நல்ல நிலையில் வாழவேண்டியே தேவர்கள் அனைவரும் உன்னை போற்றுகின்றனர். தாம் உயர்ந்த நிலையினை அடைந்து தம்மை அனைவரும் அடிபணிந்து வணங்க வேண்டியே அத்தேவரெல்லாம்  உன்னை உள்ளத்தில் நினப்பவராகவும். உள்ளனர். நாயேனாகிய  அடியேனும், பாழாய்ப்போன எனது பிறப்பினை நீக்கவேண்டி உன்னை வணங்கி போற்றுவேன்.

07. பரவுவோர் இமையோயர்கள் பாடுவன நால்வேதம்
      குரவுவார் குழல்மடவாள் கூறுடையா ளொருபாகம்
      விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மென்மேலுன்
      அரவுவார் கழலிணைகள் காண்பரோஅரியானே.

காண்பதற்கு அரியவனே! வானவர் உன்னை வணங்கியவாறே உள்ளனர். நான்கு வேதங்களும் உன் புகழைப் பாடியவாறே உள்ளன. குரவ மலர்களைசூடிய உமையம்மையோ, உன் உடலின் இடப்பாகமாக அமையப் பெற்றாள். மெய்யன்புடைய உன்அடியவரோ , வந்துன்னைத் தொழுதவாறே உள்ளனர். இருப்பினும் கழல்கள்  அணிந்துள்ள உன் திருவடிகளை காண இயலுமோ?   

08. அரியோனே யாவர்க்கும் அம்பரவா அம்பலதெம்
      பெரியோனே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ்
       விரையார்ந்த மலர்தூவேன் வியத்தலறேன் நயந்துருகேன்
       தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே.

அரியவனே! யாவருக்கும் மேலானவனே! தில்லைச் சிற்றம்பலத்துள் விளங்குகின்ற எம்பெரியவனே! சிறியோனாகிய என்னை ஆட்கொண்ட தண்டை அணிந்த உன்திருவடிகளுக்கு மணம்நிறை மலர் தூவி அறியேன். உள்ளம் உருகுமாறு அறியேன். என்வே நான் உயிரோடு இருக்க பொறுக்க மாட்டேன். இதற்கு என்ன வழ்? நான் சாக வேண்டும்; சாகவே வேண்டும்.

09. வேணில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய
      பானலர் கண்ணியர்க்கும் பதைத்துருகும்  பாழ்நெஞ்சே
      ஊனெல்லாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்
     வானுள்ளான் காணாய்நீ மாளாவாழ் கிறாயே.

வசந்த கால மன்மதனின் மலர்க் கணைக்கும், வெண்மையான பற்களையும், செம்மையான வாயினையும், கருமையான குவளைமலர் போன்ற கண்களையும் கொண்ட பெண்களுக்கு விரைவாக உருகின்ற என் பாழ்பட்ட மனமே! நீ குடி கொண்டுள்ள உடலனத்தும் உருகுமாறு உன்னுள் நுழைந்து, உன்னை ஆஅட்கொண்டவன் அல்லனோ நம் சிவன்? அவன் இன்று சென்று, வானுலகத்தில் உள்ளான் என்பதனைக் காண மனமில்லாதநீ, இன்னும் சாகாமல் உயிர் வாழ்கின்றாயே!

10. வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
      ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே
      சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் 
      வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே.

சிவனின் திருவருளை எண்ணி வாழாமல், வீணாய் வாழ்கின்ற எனது மனமே! துன்பத்துள் மூழ்கிப் போகாமல் காக்கும் சிவனைப் போற்றாது தீவினையில் மூழ்குகிறாய்! உனக்குத் தீமைகளே உண்டாகுமாறு நியே செய்து கொள்கிறாய். நான் மீண்டும், மீண்டும் பல முறைகள் எடுத்துச் சொல்லியும், நீ துன்பக் கடலாகிய பெரு வெள்ளத்தில் மூழ்குகின்றாயே! உனது செயல்தான் என்னே!          

              

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1