ஞாயிறு, 9 மே, 2010

திருவாசகம் - திருச்சதகம் - (03)




திருச்சிற்றம்பலம்
சுட்டறுத்தல்

 [21] வெள்ளம் தாழ்விரிசடையோய் விடையாய் விண்ணோர்
 பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம் தாழுறு புனலில் கீழ்மேலாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தாள் நின்றுஉச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண் இணையும் மரம்ஆம் தீவினையினேற்கே.

கங்காதரா! ஜடாதரா! ரிஷபரூடா! மஹாதேவா! என்றெல்லாம் உன்னை அழைப்பதைக் கேட்ட உடனே உன் அடியவர்கள் பரவசம் அடைகின்றனர். நீர் மிக்க அருவியின் பள்ளத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்டவர்கள் உயிர்த் தப்பிக்கத் திணறுவது போன்று உன்னடியவர்கள் நின்னருளைப் பெற ஆசைப் படுகின்றனர். அத்தகையோரை விட்டுவிட்டு என்னை நீ ஆட்கொண்டாய்! உள்ளங்கால் முதல் உச்சியளவு நான் உள்ளம் உருகவில்லை. உடம்பெல்லாம் கண்ணாய் அவைகளினின்று கண்ணீர் பெருகி வெள்ளமாய் பாயவில்லை. என் நெஞ்சம் கல்லைப் போன்று உருகவிலை. கண்கள் இரண்டும் மரக் கட்டையைப் போன்று வறண்டு கிடக்கிறது. நான் அவ்வளவு கொடிய வினையுடையேன்.


[22] வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 
போது நான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே.


இறைவனே! முதலும் முடிவுமாக இருப்பவனே!உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமானவனே! முன் வினைப் பயனாய்க் கட்டப்பட்டு இருக்கும் என்முன் நீ வந்து, என்னை வாவெனெ அழைத்து, நீ முன்வினைப் பயனை அகற்றும் பரமனென அறிமுகப் படுத்திக் கொண்டு என்னை ஆட்கொண்டாய்.நீ எம் தலைவன். உன்பொருட்டு, இரும்பினால் செய்யப்பட்ட பொம்மையைப் போன்று நான் பாடவும் இல்லை; ஆடவும் இல்லை; வற்றி வாடவும் இல்லை; பக்தி மேலீட்டால் மூர்ச்சை அடைந்து போகவும் இல்லை; இவ்வாறு நான் நடந்து கொண்டது சரியா?  என்கதி என்னவாகும் என்று எனக்கு விளங்கவில்லை.


[23] ஆய நான்மறையவனும் நீயே ஆதல் 
அறிந்து யான் யாவரினும் கடையன்  ஆய 
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் 
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே அன்றி மற்றுஓர்
பேயனேன் இதுதான் நின் பெருமை அன்றே
எம்பெருமான் என்சொல்லி பேசுகேனே.


ஆராய்ந்து பார்த்தால் நீயே யாவர்க்கும் பெரியவன் என்று நான்கு வேதங்களும் கூறுகின்றன. நான் யாவரினும் சிறியவன். என்றாலும் நான் உனக்கு புறம்பானவன் அல்லன். நாயினை ஒத்த நான் உனக்கு அன்பன் என்று சொன்னதும் நீ அதனை உறுதி செய்து விட்டாய். உனக்கு வேறு அடியவர் இன்மையால் நீ இவ்வாறு செய்யவில்லை. தகுதி வாய்ந்த அன்பர்கள் பலர் உனக்கு இருக்கின்றனர். உன் அளவற்ற கருணையினால் நீ இவ்வாறு செய்தாய். உன் கருணைத் திறத்தை நான் எப்படி கூற இயலும். 


[24] பேசின்  தாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானெ என்று என்றே பேசிப் பேசிப்
பூசின் தாம்  திருநீறே நிறையப் பூசிப்
போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே.

ஒளிவ்டிவான எந்தந்தையே! பே வேண்டி இருப்பின் உன் அடியவர்கள் ஈசா, எம்தாயே, எம்தந்தையே, எம்பெருமானே என்று ஓயாது உன்னையேப் பற்றிப் பேசுவார்கள். அவர்கள் திருநீற்றையே நிறையப் பூசுவார்கள். உன்னிடத்தில் மாறாத  அன்பு கொண்டதினால் அவர்கள் பிறப்பு, இறப்பைக் கடந்தனர். நீயும் அவர்களை ஆட்கொண்டாய். பின் ஆசைக் கடலில் மூழ்கிக் கிடந்த கள்வனாகிய என்னையும் நீ ஆட் கொண்ட தன்மைதான் என்னே!


[25] வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் 
எய்தும் ஆறு அறியாத எந்தாய் உந்தன்
வண்ணம்தான் அதுகாட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் 
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே.

நீ சிவந்த நிறத்தவனா, வெண்மை நிறத்தவனா, நீ அநேகனா, ஏகனா, நீ அணு வடிவினனா, பரம அணு வடிவினனா, இப்படி எல்லாம் ஆய்ந்து தேவர்கள் குழம்பினர். உன்னை அடையும் வழி அறியாமல் இருந்த எனக்கு அவ்வழியினைக் காட்டி அருளி, உன் உண்மையான் சடிவழகானது மேற்கூறிய யாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்பதன அனுபூதியில் விளக்கினாய். என் ஐயங்கள் விலகிப் போயின. நான் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என்பதனையும் அறிந்து கொண்டேன். சிந்தனையாலும், சொல்லாலும் உன்னைப் போற்றுவது குறைவற வழிபாடாகும்.


[26]  சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் 
கண் இணைநின் திருப்பாதம் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதம் பெரும் கடலே மலையே உன்னைத் 
தந்தனை செம் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டும்இல் இத்தனியனேற்கே. 

பெரிய அமிழ்தமாகியக் கடலே! மலையே! செந்தாமரைக் காடு போன்ற மேனியனே! சுய ஒளியே! என் மனத்திதினை உனக்கு உரியதாக்கினாய். கண்களிரண்டினையும் உன் திருவடித் தாமரைகளைக் காண்பதற்கு ஏவினாய். செய்யும் வழிபாடுகளை எல்லாம் உன் திருவடிகளுக்கே உரியதாக்கினாய். நான் பேசும் பேச்சை எல்லாம் உன் பெருமையைப் புகழ்வதற்குப் பயன் படுத்தினாய். ஐம்பொறிகளும் உன் அருள் பிரசாதத்தை வழங்கினாய். கரணங்களை ஒடுக்குதல், கரணங்களை வழிபாட்டுக்குப் பயன்படுத்துதல் ஆகிய இரு நெறிகளையும் அறியாதஎன்னை நீ இவ்வாறு ஆட்கொண்டுள்ளாய்.


[27] தனியனேன் பெரும்பிறவி பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுக் கொண்டு பற்றொன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு 
இனி என்னே உய்யும்ஆறு ஒன்றென்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் 
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

துணை ஏதும் கிடைக்காமல் நான் பிறையாகியப் பெருங்கடலில் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகின்றது. பெண் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனத்தினை கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி பிழைக்கும் வழி எது என்று பலவாறு எண்ணுகிறேன். இந்நெருக்கடியில் ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்ற மரக்கலம், முதல்வா, உன்னருளால் கிடைக்கப் பெற்றேன். அறிவற்றவனாகிய என்னை நீ முக்தி என்னும் நிரந்தரமான பெரிய நிலத்தில் கொண்டு சேர்க்கிறாய்.
[28] கேட்டாரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் 
கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் 
நாட்ட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே 
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் 
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.

காதால் கேட்டுப் பரமனை எவரும் அறிய முடியாது. அழிவென ஒன்றும் இல்லாதவன். சுற்றம் ஒன்றும் இல்லாதவன். ஊனச் செவி இல்லாது அவன் அனைத்தினையும் கேட்கிறான். நாடு மக்கள் எல்லாரு பார்த்திருக்க,  உலகில் நாயினௌக்கு இருக்கை தந்து, நாயினேனுக்குக் காட்டாதன எல்லாவற்றையும் காட்டிப் பின்னும் கேட்க இயலாதவறையும் கேட்பிக்கச் செய்து, அடியவனாகிய என்னை மீண்டும் பிறக்கா வண்ணம் காத்து ஆண்டு கொண்டான். இவை அணைத்தும் எம் பெருமான் எனக்கு செய்து அருளிய வியப்பான செயல்கள் தாமே.

[29]  விச்சை தான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகு காதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி 
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்புகூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல்ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மாமலர் புரையும் மேனி எங்கள் 
சிவபெருமான் எம்பெருமான்  தேவர் கோவே. 

தந்தை, ஆண், பெண், அலி, ஐம்பூதங்கள், ஆகிய இவை அனைத்துமாய் இருப்பவன் சிவன். இவை அனைத்தும் ஒடுங்கும் இடம் அவனே. இவை அனைத்திற்கும் அப்பால் இருப்பவனும் அவனே. அழகிய வெட்சிப் பூப் போன்ற சிவந்த உடல் உடையவன் அவனே.பேரன்பே வடிவெடுத்துள்ள தன் அடியவர் கூட்டத்தில் அவன் என்னைச் சேர்த்து வைத்தான். அவர்களோடு சேர்ந்திருக்கும் போது உலகப்பற்று வந்துவிடுமோ என்ற பயமில்லை.அமிழ்தம் வடிவமாக அவன் என் நெஞ்சில் கலந்துள்ளான். இதனைப் போன்ற மேலான வியப்பான ஒன்றை வேறெங்கேனும் யாராவது  கேட்டது உண்டோ?


[30]  தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டு  கொண்டான் 
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் 
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு 
 மேல் மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 

மகாதேவனை தேவர்களுக்கு அரசன் அறிய மாட்டான். மூன்று மூர்த்திகளுக்கும் அவனே தலைவன். தோன்றியுள்ள அனைவர்க்கும், அனைத்துக்கும் அவனே முழுமுதற் பொருள். உமையம்மையை ஒரு பாகத்தில் வைத்துள்ள தந்தை என்னை வலிய வந்து ஆட்கொண்டான். அவனைத் தவிர வேறு எவருக்கும் நாங்கள் குடி அல்லோம் அனி பயப்படுவதற்கு யாண்டும்  ஒன்றும் இல்லை. அவனடியார் அனைவரும் ஆனந்தக் கடலில் திளைத்திருப்போம்.    
 


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1