வெள்ளி, 18 டிசம்பர், 2009

பாவை நோன்பு - தொடர்ச்சி - [04]

திருவெம்பாவை -நான்காம் பாடல்


ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்

தெண்ணிக் குறையில் துயிலோர் எம்பாவாய்.


{ ஒள் நித்திலம்-ஒளியுள்ள முத்துக்கள்., அவமே-வீணே., விழுப் பொருள்-

மேலான பொருள். }


தோழி : ஒளிவீசும் முத்துகளைப் போன்ற பல்வரிசை உடையவளே, உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

உறங்குபவள் : கிளி போல் பேச்சு பேசுவோரெல்லாம் வந்துள்ளனரா?


தோழி : எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கிறோம். அதுவரை நீ தூங்கிக் காலத்தை வீணே கழியாதே. விண்ணுலகத்தவர்க்கு ஒப்பற்ர மருந்தாய் இருப்பவனை, வேதங்கள் போற்றுகின்ற மேலான பொருளை, கண்ணுக்கு குளிர்ச்சியாயும், இனிமையாகவும் உள்ளவனைப் பாடி உள்ளம் குழைந்து, மனம் நெகிழ்ந்து நின்று உருகுவாயாக.


நாங்கள் வந்துள்ளவர்களை கணக்கெடுத்துக் காலத்தைவீணாக்க மாட்டோம். நீயே வந்து கணக்கிட்டுக்கொள்.கூடிய்ள்ளோர் எண்ணிக்கை குறையுமாயின் நீ சென்று தூங்கலாம். தோழியே, செய்யத்தக்கது எதுவென்று நான் சொல்லுவதை ஏற்றுக்கொள். பின்பு அதை எண்ணிப் பார்.



திருப்பாவை - நான்காம் பாடல்


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாள் கண்ணனை தன் உயிராய்க் கருதியவள். உலகியல் பொருள்கள்
அத்தனையயும் கண்ணனாகக் காண்கிறாள் ஆண்டாள்.நீரின்றி அமையாது
உலகம். அந்நீரையளிக்கும் மேகத்தையே கண்ணனாகப் பாவனைச் செய்கிறள்.

ஊழி முதல்வனாகிய கண்ணன் உடலைப் போல் மேகமானது உடல்கருக்கிறது.
பத்மநாபன் கையிலிருக்கும் சக்கரம் போலமின்னுகிறது.( மின்னல்) திருமாலின் கையிலுள்ள வலம்புரிச்சங்கைப் போலதிர்கிறது.(இடி). அவனது சார்ங்கம் என்ற வில்லிலிருந்து வரும் அம்புகளைப் போன்று உலகோர் வாழும் வகையில்- தீங்கு விளைவிக்காது பெய்கிறது. பாவையரும் மகிழ்ச்சியாக நீராடுகின்றனர்.

ஆண்டாள் செய்த உயர்ந்த பாவனையால் இறைவனையே கணவனாக அடைந்தாள். அது போல் நாமும் உயர்வாக, அவ்வைப் பிராட்டிக் கூறியபடி அறம் செய விரும்பி வீடும் நாடும் உயர எண்ணுவோமாக.






















கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1