சனி, 19 டிசம்பர், 2009

பாவை நோன்பு - தொடர்ச்சி (௦05)

திருவெம்பாவை - ஐந்தாம் பாடல்


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறும் தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச்சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.


[ பொக்கங்கள் - பொய்யானவைகள்., படிறீ - வஞ்சகமுடையவளே.,
ஞாலம் - உலகம்., கோதாட்டும் - குற்றங்களை நீக்கும்.,
ஓலமிடினும் - முறையிட்டு அழுதாலும்., ஏலம் குழலி - மயிர்ச் சாந்து
அணிந்த கூந்தலை உடையவளே. ]


சிவம் என்னும் மலை போன்ற பெரிய பொருள் முழுதையும் காக்கும் கடவுள் திருமால், படைப்புக் கடவுள் பிரமன் போன்றவர்களே அறிந்து கொள்ளவில்லை என்றால், மனிதர்களாகிய நம்போன்றோர் எவ்வாறு அறிவோம். அறியமுடிய்ம் என்றால் நம் பேச்சு வெறும் பொய்ப் பேச்சாகும்.

பாலூறுவது போலும், தேனூறுவது போலும் இன்சொல் பேசுகிறாய். உன் வீட்டுக்கதவைத் திறப்பாயாக. மண்ணுலமும், விண்ணுலகமும், மற்றவுலகங்களும் சிவனை முற்றும் அறியமாட்டா. அத்தகு அரிய, பெரிய பொருளின் அழகை நம்மறிவிற்கெட்டியவாறு பாடுவோம். நம்மை அவன் எப்படி ஆட்கொண்டிருக்கிறான் என்பதையும் நம்மை எப்படித் திருத்தி அமைத்துச் சீர்படுத்தும் நல்அடர்த்திலொழுக்கம் உடைத்திருக்கிறான் என்பதையும் போற்றுவோம். அயர்ந்து உறங்குபவளே, நாங்கள் சிவனே, சிவனே என்று உறக்கக் கத்தினாலும் நீ தூக்கம் கலைந்து எழுந்திருக்கமாட்டாய். சிவ தத்துவம் எவ்வளவு சிறப்பானது என்பதை ஏற்றுக்கொள்.பின் அதை சிந்தித்துப் பார்.


திருபாவை - ஐந்தாம் பாடல்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


கண்ணன் ஆய்ப்படியிலே வெண்ணையத் திருடினான் என ஆய்ச்சியர் யசோதையிடம் புகாரளித்தன்ர். யசோதை கண்ணனை இடுப்பில் கயிற்றைக் கட்டி அக்கயிற்றை ஓர் உரலிலே கட்டினாள்.எனவே கண்ணன் இடுப்பில் கயிறு கட்டப்பட்டதால் தழும்பு உண்டாயிற்று. ஆகவே கண்ணன் தாமோதரன் எனப் பட்டான்.

நாம், மாயனை, வடமதுரையின் மைந்தனை, யமுனையாற்றின் தலவனை, ஆயர் குலத்தினில் தோன்றிய குலவிளக்கை, தேவகித் தாயின் வயிற்றைத் தான் தோன்றியதால் சிறக்கச் செய்தவனை, தாமோதரனை, உடலும்-உள்ளமும் தூய்மையுடையோர்களாய் வந்து அன்றலர்ந்த மலர்களால் தூவி, மனத்தினால் சிந்திக்க வேண்டும்.அப்படிச் செய்தால் நாம் இது வரை செய்த பாவங்களும், தற்போது உள்ளவைகளும் தீயில் தூசு காணாது போவதைப் போன்று காணாது போகும்.

குற்றம் செய்தால் அதனை ஒப்புக் கொள்ளும் பக்குவமும், மன்னிப்புக் கோரும் பக்குவமும் வரவேண்டும் என்பதை இப்பாடலில் அறிவுரை அளிக்கிறாள் ஆண்டாள்.



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1