திருவெம்பாவை - ஆறாம் பாடல்
மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே யுருகா யுனக்கே யுறுமெமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனை பாடேலோர் எம்பாவாய்.
[ நென்னலை - நேற்று., தலையளித்து - காப்பாற்றி., ]
நாளைக்கு நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று பெண்ணே, நீ நேற்றுச் சொன்ன சொல்லை வெட்கமின்றி எத்திசையில் போகவிட்டாய்? இன்னமும் விடியவில்லையா? விண்ணோரும், மண்ணோரும், மற்ற உலகத்தோரும் அறிந்து கொள்ளமுடியாத சிவன் வலியவந்து எம்மை காப்பாற்றி ஆட்கொண்டருளினான். அவனின் மேலான திருவடியைப் பாடிக் கொண்டு வருகிறோம்.எங்களுக்கு உன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசமட்டாயா? உன்னுடல் அன்பில் குழைந்து உருகாதோ? வந்துள்ள எங்களைப் பொருட்டாவது எமக்கும், மற்றவர்க்கும் தலைவனான சிவனை - தலைவனைப் புகழ்ந்து
பாடுவாயாக.
திருப்பாவை - ஆறாம் பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
இப் பாடலில் கண்ணனது இளமைக்கால, ஆய்ப்பாடியில் நடைபெற்ற நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன. கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப் பட்ட வன் சகடாசுரன். அவன் பெரிய வண்டிச்சக்கர வடிவம் கொண்டு உருண்டோடி வந்து கண்ணன் மீது பாய்ந்தான். அவனை அப்படியே தூக்கிப் போட்டு அழித்தான்.மற்றொரு சமயம் பூதனை என்பவள் பெண்வடிவம்கொண்டு தன் மார்பில்விஷம் தடவிக் கொண்டு கண்ணனுக்கு பால் புகட்ட வந்தாள்.அவளைத் தன் தாயாகக் கொண்டு கண்ணன் பாலைக் குடித்தான். கூடவே அவளது உயிரையும் குடித்தான்
விடியற் காலத்தில் பாடும் பறவைகளின் ஓசையும், கோயிலில் சங்கோசையும் கலந்து எழும் பேரோசையினைக் கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்து வா. பாற்கடலில் பாம்பணையில் அரிதுயில் (அனைதையும் அறியாமல் இருப்பதுபோன்று தூங்குவது) செய்கிற மூலமானவனை முனிவர்களும்,யோகிகளும் உள்ளத்திலே கொண்டு ஹரி, ஹரியென்ற பேரொலியினை உள்ளத்தே கொண்டு நீராடவருவாயாக.
தன்னைக் கொல்ல வந்தவர்க்கும் பரம பதம் அளிக்க காத்திருகிறான் கண்ணன், நாராயணன் என்பதை இப்பாடல் விளக்குகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக