திருவெம்பாவை - ஒன்பதாம் பாடல்
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலமோர் எம்பாவாய்.
[ பேர்த்தும் - மீட்டும் ; பாங்கு - தோழமை ; தொழும்பாய் - பணிவாயும், அன்பாயும் ;]
பழையவைகளில் எல்லாம் மிகவும் பழமையானவனே! பின்பு புதியவைகளில் எல்லாம் மீண்டும் புதியவனாய் இருப்பவனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் திருவடிக்கே உரியவர் ஆவோம். உன்னடியார் பாதங்களையே வனங்குவோம். அப்படிப்பட்டவர்களே எங்கள் கணவர்கள் ஆவார்களாக. அப்படிப் பட்டவர்க்கே தொண்டராய்ப் பணி செய்வோம். இந்தவிதம் எங்கள் இறைவா, எங்களுக்கு அருள் செய்வாயாக.எங்களுக்கு குறை ஒன்றுமில்லை.
திருப்பாவை - ஒன்பதாம் பாடல்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்த்ன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
பெரிய மாளிகயைச் சுற்றிலும் விளக்குகள் எரிகின்றன. எங்கும் நறுமணம் வீசுகிறது. அங்கு மென்மையான மெத்தையின் மேல் உறங்கும் மாமன் மகளே! மணிக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாயாக.எங்களின் அன்புமிக்க மாமியே! அவளை எழுப்புங்கள். உன் மகள் ஊமையாய் விட்டாளா? காதுகள் செவிடாய்ப் போய்விட்டனவா?மயக்கத்தில் உள்ளாளா? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாளா? மாயவனே! மாதவனே! வைகுந்தனே! என்று எம் பெருமானின் பெயர்களைப் பலவாறாக உரக்கச் சொல்லியும் கூட எழுந்து வராமல் இவளிருக்கக் காரணம்தான் என்னே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக