திருவெம்பாவை - பத்தாம் பாடல்
பாதாளம் ஏழினும்கீழ் சொல்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதுஇல் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
[ சொல்கழிவு - சொல்லைக் கடந்தது; ஓத உலவா - சொல்லில் முற்றுப்பெறாத;
கோது - குற்றம்; பிணா - பெண். ]
சிவனின் திருப்பாதங்கள் சொற்களால் விளக்க இயலாதபடி பாதாளங்கள் அனைத்துமாயிருக்கின்றன.அவனது திருமுடியோ எல்லப் பொருள்களுக்கும் முடிவானதாய் இருக்கிறது. உமை அம்மையை தன்னுடலில் ஒரு பாகமாகக் கொண்ட அவனுக்கு உடல் ஒன்றன்று.
அவனை வேதங்களும்,தேவர்களும், மக்களும் முற்றும் விளக்க இயலாது.
அவன் சொல்லில் அடங்காத உயிர்த்தோழன். தொண்டர் உள்ளத்தில் தெளிவுற இலங்குகின்றான். குற்றமில்லா ஏற்றமுடைய அரனின் கோயிலில் உள்ளபெண்பிள்ளைகளே, அவனுக்கு ஊர் இல்லை; பேரில்லை; உறவினர் இல்லை; வேற்றார் இல்லை; அவனை முழுதும் விளக்கிப் பாடும் விதம் கிடையாது. பெண்ணே அவனது மகிமையை ஏற்றுக் கொள்.
திருப்பாவை - பத்தாம் பாடல்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றேமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
நோன்பு இருந்து பகவானையே கதியாக வாழ்ந்து இன்பங்களைப் பெற்ற தலைவியே! கதவைத் திறக்காவிட்டாலும் பதிலாவது சொல்லக் கூடாதா? மணம் கொண்ட துளசி மாலையை அணிந்த நாராயணன், நம் நோன்பிற்கு வேண்டிய பலனைத் தரக்கூடிய புண்ணிய மூர்த்தியாய் இருக்கிறான்.முன் ஒரு காலத்தில் கும்பகர்ணன் எமன் வாயில் அகப்பட்டு
இறந்தான். அவன் தோற்றததால் உனக்குத் தன் தூக்கத்தை கொடுத்துச் சென்றுவிட்டானானோ? தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவைத் திறப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக