திருவெம்பாவை - பதினைந்தாம் பாடல்
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்கனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம் பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
எம்பெருமான் என்றே ஒருவேளையில் சொல்லிக் கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம் பெருமானது பெருமையை ஓயாது சொல்லிக் கொண்டிருப்பாள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை முன்னிட்டு வேறொரு வேளையில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருப்பாள். இன்னொரு வேளையில் பூமியில் வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராயிருந்தாலும் வேறு யாரையும் மதிக்கமாட்டாள். ஓருயிரை இப்படி முற்றிலும் தன் மயமாக்கிக் கொள்ளும் ஞான வடிவினரான் இறைவரை வாயாரப் பாடிப் பொய்கையிலே குதித்து நீராடுவோமாக.
திருப்பாவை - பதினைந்தாம் பாடல்
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனப் பாடேலோர் எம்பாவாய்.
இப்பாடல் உரையாடல் வடிவில் உள்ளது.
தோழிப் பெண்கள்: “ஏலே இளமையான கிளி போன்ற பெண்ணே! உன் வீட்டு நாங்கள் வந்து கூடிவிட்டோம்.நீ இன்னும் உறங்குகிறாயே”
வீட்டுப் பெண்:” ஏன் இப்படி காது கூசும்படி அழைக்கிறீர்கள்? நான் கிளம்பி வந்து கொண்டிருக்கிறேன்.”
தோ.பெ: ”கதை சொல்வதில் உன்னைப் போன்றவள் யாருமில்லை. உன் வாய் சாமார்த்தியத்தை நாங்கள் நன்கறிவோம்:”
வீ.பெண் : பழி சொல்வதி நான் கெட்டிக்காரி என்று ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் நீங்களும் பிறர்மீது குறை சொல்வதில் கெட்டிக்காரர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.எல்லாரும் வந்துவிட்டார்களா?”
தோ.பெ: ”நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். சீக்கிரம் வந்து எங்களுடன், குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்ற கண்ணனைப் பாடுவாயாக.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக