செங்க ணவன்பால்திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பர்நம் பாலதாக்
கொங்குண் கருன்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
[ சென்கணவன் - { செங்கண்ணவன் } திருமால் ; திசைமுகன் - பிரம்மா ; கொங்கு உண் - மணம் தங்கிய;
கோதாட்டிய - குற்றம் நீக்கிய ; }
இயல்பாகவே மணம் தங்கிய கருமையான கூந்தலையுடையவளே! திருமால், பிரம்மா முதலான தேவர்களுக்குமில்லாத பேரின்பம் நமக்கு எப்போதும் சொந்தம்.நம் குற்றங்களை நீக்கப்பெறும்போது அது அனுபூதியாகிறது. அதன் பொருட்டு இறைவன் நம் வீடுதோறும் எழுந்தருளுகிறான். அவன், செந்தாமரைபோன்ற தனது பொற்பாதத்தை நமக்கு கொடுத்தருளும் சேவகனாகிறான். கருணை மிக்க கண்களையுடைய அரசன் அவன். அடியராகிய நமக்கவன் அமிர்தம். தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமையைப் பாடுவோம்.
திருப்பாவை - பதினேழாம் பாடல்
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
வேண்டினோர் வேண்டியபடி மகிழ்வுடன் ஆடைகளையும், நீரையும், சோற்றையும் கைமறு கருதாது வழங்கும் நந்தகோபனே எழுவாயாக. பெண்களுக்கு எல்லாம் அழகி சிறந்த யசோதையே! எங்கள் ஆயர் குல விளக்கே!எழுவாயாக. உலகையெல்லாம் திருவடியால் அளந்த தேவாதி தேவனே! தூங்காது எழுவாயாக. பொற்கழல்களை பாதத்தில் அணிந்திருக்கும் பலராமனே, நீயும் உன் தம்பி கிருஷ்ணனும் எழுந்து அருள் புரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக