திருப்பள்ளியெழுச்சி - எட்டாம் பாடல்
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அரிகிலார் யாவர் மற் றறிவார்
பந்தனை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
எம்பெருமானே! நீதான் உலகத் தோற்றத்தின் முதலாகவும், நடுவாகவும், இறுதியாகவும் விளங்குகிறாய்.நான்முகன், திருமால், உருத்திரன் ஆகியோரும் உன்னை முவதுமாக அறிந்தார் அல்லர். அவ்வாறிருக்கையில் வேறு யார் தாம் உன்னை அறிவார்? உமை அம்மையோடு நீயும், உன்னடியவரின் வீடுதோறும் எழுந்தருளிய பரம்பொருளே! செந்தணலை ஒத்த உந்திருமேனியின் அழகினைக் காட்டினாய். நீ குடி கொண்டிருக்கு திருப்பெருந்துறைக் கோயிலையும் காட்டினாய். அங்கு வேதியன் வடிவில் காட்சி தந்தும், குருவாக விளங்கியும் என்னை ஆட்கொண்டாய். அமுதாக இருப்பவனே பள்ளி எழுந்தருள்வாயே.
திருப்பாவை-இருபத்தெட்டாம் பாடல்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனை புண்னியம் யாமுடையோம்
குறை வொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீரியருளாதே
இறைவா! நீ தாராய் பரையேலோ ரெம்பாவாய்.
நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காட்டையடைந்து உடம்பை வளர்ப்போம்.மேலும் நாங்கள் சிறிதும் அறிவற்ற ஆயர் குலத்திலே பிறந்து உன்னை எங்களுடைய பிறவியாக பிறக்குமளவு புண்ணியம் உடையவர்களாய் இருக்கிறோம். எவ்விதத்திலும் ஒரு குறையும் இல்லாத கோவிந்தனே1 உன்னோடு எமக்கு உள்ள உறவு நீங்க முடியாதது. சிறு பெண்களாகிய நாங்கள், உன்னிடத்தில் கொண்டுள்ள பக்க்தியால் உன்னைச் சிறுபேரை இட்டு அழைத்தை பற்றி அருள் கொண்டு கோபியாது இருப்பாயாக. எம்மிறைவனே! எங்களின் நோன்புக்கு வேண்டிய பறையைத் தருவாயாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக