சனி, 30 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦29)




திருப்பள்ளியெழுச்சி-ஒன்பதாம் பாடல்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
           விழுப்பொரு ளேயுன தொழும்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
           வந்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேனின்று களிதரு தேனே
           கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாயுல குக்குயி ரானாய்
           எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


எம்பெருமானே! விண்ணுலகத் தேவரும் நெருங்க இயலாத மேலான பொருளாக விளங்குபவனே! உன்னடியவராகிய எங்களை, இப்பூமியில் எழுந்து வந்து, நன்றாக வாழச் செய்தவனே! திருபெருந்துறையில் இருப்பவனே! உனக்கு வழி வழியாக அடியவராக இருந்து வரும் எங்களின்  கண்களுக்குள் நிலைத்தவாறு மகிழ்வினை தருகின்ற தேன்போன்றவனே! 
தெவிட்டாத அமுதமே! செங்கரும்பின் தீஞ்சுவையே! அடியவரின் உள்ளத்தே எழுந்தருள்பவனே! உலக உயிர்க்கெல்லாம் உயிரானவனே! பள்ளி எழுந்தருள்வாயே.




திருப்பாவை - இருபத்தொன்பதாம் பாடல்


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்னும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கேநா மாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.



விடியற்காலையிலே நீ இருக்குமிடத்தில் வந்து உன்னை வணங்கி, உன் திருவடிகளை நாங்கள் போற்றுவதன் பயனைக் கேட்பாயாக. நீ மாடுகளை மேய்த்து அவை உண்டது கண்டபின் உண்கின்ற குலத்திலே பிறந்து, எங்களின் பணிவிடைகளைக் கொள்ளாமல் விட்டுவிடுவது உனக்குத் தகாது.இப்போது நாங்கள் வந்தது பறையைக் கொள்ளும் பொருட்டு அன்று.நாங்கள் எப்போதும் நீ எடுக்கும் எந்த அவதாரத்திலும் இப்போது இருப்பது போலவே உன்னோடு பொருந்தியவர்களாகவே இருக்க வேண்டும். உனக்கே அடிமை செய்பவர்களாகவும் வேண்டும்.இவற்றைவிட வேறுபட்ட எங்களின் விருப்பங்களைப் போக்குவாயாக. 
       


கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1