ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பாவை நோன்பு - தொடர்ச்சி - (௦30)



திருப்பள்ளியெழுச்சி-பத்தாம் பாடல்


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
 படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள வல்லாய்
ஆரமு தேபள்ளி ந்ழுந்தருளாயே.




தெவிட்டாத தெள்ளமுதமாக விளங்குபவனே! திருப்பெருந்துறையில் உறைபவனே! இப்பூமியானது, நாம் கடைதேறுவதர்கென்றே படைக்கப் பட்டது. அவ்வாறிருக்கவும், நாம் அங்குச் சென்று பிறவாமல், வாழ்நாளை வீழ்நாளாகக் கழித்துக் கொண்டுள்ளோம் என்றவாறு எண்ணிக் கொண்டு, பூமியில் பிறக்கத் திருமால் விரும்புகிறான். உன்மெய்யான கருணையுட, இப்பூமியில் எழுந்தருளி, அடியவராகிய எங்களை எல்லாம் ஆண்டு கொள்ள வல்லவனே! திருப்பள்ளி எழுந்தருள்வாயாக.




திருப்பாவை-முப்பதாம் பாடல்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தந்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
 எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.


சந்திரன்போல் அழகிய முகத்தை உடையவரும், ஆபரணங்களைப் பூண்டவருமான இடைச் சிறுமியர், திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனையும், கண்ணனையும் சென்றடைந்து பறைகொண்ட செய்தியை பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள் அருளிச் செய்த சங்கத் தமிழ்ப் பாமாலையாகிய இம்முப்பது பாடல்களையு ஒரு பாடலும் குறையாது இங்கு பாடுபவர்கள் மலைபோன்ற தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய திருமுகத்தையும் உடைய திருமாலால் இம்மை, மறுமை என்ற எல்லா இடங்களிலும் அப்பெருமானுடைய பெருங் கருணையை அடைந்து எம்பெருமானுடைய சேர்க்கையால் உண்டான  பரமானந்தத்தைப் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1