செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஆலய தரிசனம் ஸப்த ஸ்தலங்கள்


             சைவத்தின் மெற்சமயம் வேறில்லை யதிற்சார் சிவமாம்
                 தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லென்னும் நான்மறைச்
                                                                                                                              செம்பொருள்
                 வாய்மைவைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
                 உயர்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாளெம் உயிர்த்துணையே

                                                                                                                                (அருணைக்கலம்பகம்)

                   பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
                  ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
                  வாழிதிரு நாவலூர் வந்தொண்டர் பதம்போற்றி
                  ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி.

                  நமது புண்ணிய தேசத்தில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை நமது இந்துக் கோவில்கள் பரந்து விரிந்துக் கிடக்கின்றன.நம் நாட்டில் பட்டித்தொட்டி எங்கும் சிறிய மற்றும் பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. அவைகள் இறையடியார்களால் பாடப்பெற்றுள்ளன.
      
                புராதனமான இத் தலங்களை (1) தேவாரத் திருத்தலங்கள்[274],
                                                                                  (2) ஜோதிர்லிங்கத் தலங்கள்(12),
                                                                                  (3) அட்டவீரட்டத்தலங்கள்(8),
                                                                                  (4) பஞ்சபூதத் தலங்கள்(5),
                                                                                  (5) பஞ்ச சபைத் தலங்கள் (5),
                                                                                  (6) ஸப்தவிடங்கத் தலங்கள்(7),
எனப் பலவகையாகப் பிரித்து நம்முன்னோர் வழிபாடு செய்து வந்துள்ளனர்.அவ்வாறு வழிபட்ட ஸப்தவிடங்கத் தலங்கள் பற்றி விரிவாக ஈண்டு காண்போம்.

ஸப்தவிடங்கத் தலங்கள் உருவாவதற்கு காரணமானவர் முசுகுந்தச் சக்ரவர்த்தி  ஆவார். இவரது வரலாறு பின்வருமாறு நம்பப் படுகிறது.

                  தேவலோகத்தில் உள்ள கந்தர்வன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட சாபம் காரணமாக குரங்காக உருப்பெற்றான். அவன் ஒரு சமயம் வில்வ மரத்தின் மேல் மர்ந்திருந்தான். சிவன், பார்வதி அவ்வில்வ மரத்தின் கீழிருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். வில்வ மரத்தின் மேலிருந்த குரங்கு கிளைக்கு கிளை தாவியதால் மரத்தினுள்ள வில்வ இலைகள் அம்மையப்பர் மீது அர்ச்சிப்பது போல்விழுந்தன. அம்மை அப்பர் மரத்தின் மேல் நோக்க, அவர்களின் பார்வையின் அருள்திறத்தினாலே குரங்காய் இருந்த கந்தர்வன் தன் சுய உருவம் பெற்றான். அவன் வில்வ மரத்தின் கீழிறங்கி வந்து அம்மையப்பரை வணங்கினான். அம்மையப்பரும், தங்களை வில்வத்தால் அர்ச்சித்ததால் மறுபிறவியில் நீ ஒரு மன்னனாக பிறக்கக்கடவாய் என ஆசி கூறினர். கந்தருவன் தான் அவ்வாறு மறுபிறவியில் பிறக்கும் போது குரங்கு முகத்தினோடு பிறக்க வேண்டும் என் அம்மையப்பரிடம் வேண்டிக் கொண்டான்.அம்மையப்பர் அருளியவாறே அக்கந்தர்வன் தனது அடுத்த பிறவியில் குரங்கு முகத்துடனே பிறந்து மன்னனாக ஆட்சி செலுத்தி வந்தான். முசு என்றால் குரங்கு என்பது பொருள். மன்னன் குரங்கு முகத்தைப் பெற்றிருந்ததால் முசுகுந்தன் என்று பெயர் பெற்றான்..

ஸோமாஸ்கந்த மூர்த்தி / தியாகராஜர்
 இந்திரனுக்குக் கிடைத்த வரலாறு

திருமால் தனக்கு ஒரு ஆண் மகவு வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். இறைவன் இறைவியோடு காட்சி தர, திருமால் இறைவனை நோக்கி ஒரு அழகிய புத்திர பாக்கியம் அருளவேண்டு மென்று வேண்டினார். சிவனும் அவ்வாறே வரமளித்தார். திருமாக் சிவனின் இடம்புறம் இருந்த உமையை வணங்கவில்லை. அதனால் சினம் கொண்ட உமை சிவனருளால் பெற்ற மகன் 
சிவனாலேயே இறப்பான் என சாபம் கொடுத்தார். திருமால் திகைத்து நின்றார். பிபு, சிவனை அருளானையின்படி அம்மையப்பரையும், முருகக் கடவுளையும் ஒரே ஆசனத்தில் எழுந்தருளச் செய்து ஆகம விதிப்படி திருமால் பூஜை செய்தார். சிவபெருமான் உமாதேவியாரோடு திருமாலுக்கு காட்சி அளித்தார். உமையம்மை மனம் மகிழ்ந்து தன் சாபம் தடைபடாது , ஆனால் உன் மகன் நெருப்புக் கண்ணால் வெந்து ,பின் பிழைப்பான் என்று வரம் தந்தார்.சிவனை சோமாஸ்கந்தர் திருக் கோலத்தோடு எப்பொழுதும் எழுந்தருளி இன்னருள் புரிந்து இந்த உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என திருமால் வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே அருள் புரிந்தார். திருமால் தன் நெஞ்சக் கோயிலில் அம்மூர்த்தியை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார். தேவலோகத்தில் அசுரர்கள் தொல்லை தாங்காமல் இந்திரன் திருமாலிடம் தஞ்சம் அடைந்தார். அதுசமயம் தான் வணங்கும் சோமாஸ்கந்தரை இந்திரனுக்கு திருமால் அளித்தார். இதை வைத்து பூஜை செய்தால் சிவனருள் பெற்று வெற்றி கிடைக்கும் என்றுகூறி சோமாஸ்கந்தமூர்த்தியாகிய தியாகராஜரை தந்தார். இந்திரன் அதைப் பெற்றுக் கொண்டு பூஜை செய்து அசுரர்களின் துன்பத்திலிருந்து நீங்கினான்.

ஒருசமயம் இந்திரனுக்கும் வலன் என்ற அரக்க அரசன் ஒருவனுக்கும் போர் மூண்டது.அந்த அசுர அரக்கனை வெல்ல முசுகுந்த சக்ரவர்த்தியின் துணையை நாடும்படி இந்திரனுக்கு குருபகவான் ஆலோசனை அளித்தார். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, முசுகுந்த சக்ரவர்த்தியும் அசுரனை வென்று தேவர்களுக்கு உதவினான். போரின் முடிவில் இந்திரன் முசுகுந்தருக்கு வரம் அளிக்க விரும்பி யாது வேண்டுமென கேட்டார். அதற்கு முசுகுந்தர் இந்திரன் வழிபடும் சோமாஸ்கந்த மூர்த்தியினை அளிக்கும்படிக் கேட்டார். இந்திரன் தான் வழிபடும் சோமஸ்கந்த மூர்த்தியினை முசுகுந்தசக்ரவ்ர்த்திக்கு அளிக்க மனமில்லாமல் தேவலோகத்திலுள்ள மயன் என்ற தேவதச்சன மூலம் தான் வழிபடும் சோமாஸ்கந்த மூர்த்தியினைப் போன்று மேலும் ஆறு மூர்த்திகளை உருவாக்கி, முசுகுந்தசக்ரவர்த்தியை இந்த ஏழு மூர்த்திகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டினார். அந்த ஏழு மூர்த்திகளும் ஒரே மாதிரியாக இருந்தனர். இக்குழப்பத்தை நீக்க சிவனை முசுகுந்த சக்ரவர்த்தி வேண்டினார். சிவனும் செங்கழுநீர்ப்பூக்களை தரித்துள்ள மூர்த்தியே இந்திரன் வழிபட்டுவரும் மூர்த்தி என்று அருள் புரிந்தார். முசுகுந்தரும் அம் மூர்த்தியையே தன் கையில் எடுத்தார். இந்திரன் அவரது சிவபக்தியைப் பாராட்டி மற்ற ஆறு மூர்த்திகளையும் முசுகுந்தசக்ரவர்த்திகே அளித்தார்.

அவ்வாறு இந்திரனிடம் இருந்து பெற்ற ஏழு மூர்த்திகளையும் பூலோக்த்தில் ஏழு இடங்களில் முசுகுந்த சக்ரவர்த்தி ஸ்தாபித்தார்.இந்திரன் வழிபட்ட மூல மூர்த்தியை [1] திருவாரூரில் ஸ்தபித்தார்.ஏனைய ஆறையும் முறையே
[2] திருநள்ளாறு, [3] திருநாகைக்காரோணம் (நாகப்பட்டிணம்),
[4] திருமறைக்காடு (வேதாரண்யம்), [5] திருவாய்மூர், [6] திருக்காறாயில் (திருக்காரவாசல்), [7] திருக்கோளிலி (திருக்குவளை)  ஆகிய இடங்களில் ஸ்தாபித்தார். இவையே ஸப்தவிடங்கத் தலங்கள் என்று பெயர் பெற்றன. விடங்கம் என்றால் உளி. உளி படாமல் சுயம்புவாகத் தோன்றினமையால் விடங்கர் என்று பெயர் வந்தது.



       
  



கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1