வியாழன், 28 அக்டோபர், 2010

சப்த விடங்கர்த் தலங்கள்

திருச்சிற்றம்பலம்.

 [7] திருக்கோளிலி
(திருக்குவளை)

இறைவர் பெயர் : பிரமபுரீசுவரர் - கோளிலி நாதர் - கோளிலிநாதேஸ்வரர்
இறைவி பெயர் : வண்டமர் பூங்குழலி
தலமரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் - இந்திர தீர்த்தம் - விநாயக தீர்த்தம் - சக்தி தீர்த்தம்.
வழிபட்டோர்: பிரமன் - திருமால் - இந்திரன் - அகத்தியர் - முசுகுந்த சக்ரவர்த்தி - பஞ்ச பாண்டவர்கள் - நவக்கிரகங்கள் - ஹேமகாந்த மன்னன்

தேவாரப் பாடல்கள்:
சம்பந்தர் :
  1. நாளாய போகாமே ... 1 / 62
அப்பர் :
  1. மைக்கொள் கண்ணுமை ...  5 / 56
  2. முன்ன மேநினை யாதொழிந் ... 5 / 57

சுந்தரர்:

  1. நீள நினைந்தடி யேனுமை ... 7 / 20
சிறப்புகள் :
  •  இத்தலம் மக்கள் வழக்கில்  “திருக்குவளை” என்று வழங்கப்படுகிறது.
  • நவக்கிரகங்கள் முதலியோஉக்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால்  “கோளிலி” என்று பெயர் பெற்றது. 
  •  “கோளாயாய” நீக்குமவன் கோளிலி எம்பெருமான்” என்பது சம்பந்தர் வாக்கு.
  • பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரம்மஹத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
  • முன் கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரம்மஹத்தி உருவமும் உள்ளது.
  • குண்டையூரிலிருந்த வேளாண் செல்வராகிய குண்டையூர் கிழார், ஆளுடைய நம்பியாரிடம் அளவற்ற அன்புடையவராய் அவருக்கு வேண்டிய செந்நெல், பருப்பு முதலியவற்றை அனுப்பி வந்தார். மழியின்றி வளம் பொய்த்துப் பஞ்சம் வரவே, அவ்வாறு செய்ய முடியாமல் அவர் வருந்தவே, சிவபெருமான் குவியல், குவியலாக அவர்பால் நெல் நிரப்பும்படி அருள் செய்தா. குண்டையூர் கிழார், பெருமானது திருவருளை வியந்து தொழுது ஆளுடைய நம்பிக்குச் செய்தியைக் கூறி அந்நெல்லை எடுத்துச் செல்லப் பலபல ஆள்கள் வேண்டும் என்றார். உடனே நம்பி அரூரர் திருக்கோளிலிக்கு வந்து “நீள் நினைந்தடி யேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பாடவே, சிவ பெருமான் ஓர் இரவில் தம் பூதகணங்களைக் கொண்டு அத்தனை நெல்லையும் பரவையார் திருமாளிகையில் சேர்க்கச் செய்தருளினார். இன்றும் இந்நிகழ்ச்சி ஒருவிழாவாக இவ்வூரில் நடைபெறுகிறது.
  • மதுரையில் உள்ள சிவபெருமானை குண்டையூர் கிழார் தரிசிக்க விரும்ப, இறைவனும் இத்தலத்திலேயே மதுரை சோமசுந்தரக் கடவுளாக தரிசனம் தந்தார்.
  • இராமலிங்க அடிகளும் இத்தலத்துப் பெருமானிப் பாடியுள்ளார்.
  • இத்தலத்தில் நவக்கிரகங்க்ளும் வக்கிரமின்றி தெற்கு நோக்கி உள்ளன.
  • இத்தலத்தில் உள்ள மூலவர் வெண்மணலால் பிரம்மனால் கூப்பி செய்து பூஜிக்கப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அர்த்த சாம வழிபாட்டின்போது சம்பிராணி தலத்தை அருகம்புல்லால் தடவுவர். மற்றைய அபிடேகங்கள் குவளை சாத்தியே செய்யப்படுகிறது.
  • சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.
  • ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்கு சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.
  • இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகார்ண்யம் (தேற்றாவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களும் உண்டு.
  • இத்தலத்தல்ம் ஸப்த விடங்கர்த் தலங்களுள் ஒன்று. அவணி விடங்கத்தலம்; நடனம் - பிருங்க நடனம். பிருங்கம் என்றால் வண்டு என்று பொருள். வண்டு மலரை சுற்றி, சுற்றி வந்து மலரில் அமர்வது போல சுழன்றும், நிலைக்கு வந்தும் ஆடும் நடனம்.
  • இக்கோயிலில் 19- கல்வெட்டுகள் - சோழ்ர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • கல்வெட்டுகளில் இறைவன்  “திருக்கோளிலி உடைய நாயனார்” என்றும் “அவணி விடங்கத் தியாகர்” என்றும் குறிக்கப்படுகின்றார்.
அமைவிடம் : திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம். திருஆரூரிலிருந்து 19-கி.மீ. தொஅலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.

தரிசன நேரம் : மு.ப. 7.00 -12.30 & பி.ப. 4.30 - 8.45

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1